பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கச் சொல்வது ஏன்? காரணம் தெரியுமா?
அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது. அதற்கான காரணத்தை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.

அதிகாலையில எழுந்து படிச்சா, ஆழ்மனசுல பதியும். பிரம்ம முகூர்த்தத்துல தொடங்கினா, நிச்சயம் பலன் கிடைக்கும். சூரிய உதயத்துல எழுந்து சுவாமியைக் கும்பிட்டா நல்லது. பகவானைக் கும்பிடுவதோ, பாடத்தைப் படிப்பதோ, எதையேனும் தொடங்குவது, விழித்து எழுவது என்று எதுவானாலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யச் சொல்வது ஏன்? அதையே ராத்திரியில் உட்கார்ந்து சின்சியராகச் செய்தால் பலன் கிடைக்காதா?
எல்லாம் அந்தக் காலத்துல விளக்கு வெளிச்சம் கிடையாது. அதனால காலைல படிக்கச் சொன்னாங்க, இப்போதான் ராத்திரியையே பகலாக்கற மாதிரி விளக்குகள் இருக்கே. அப்புறம் எப்போ செஞ்சா என்னா? என்றெல்லாம் உங்களுக்குத் தோன்றலாம்.
உங்களுக்குத் தெரியுமா?
நம் முன்னோர்கள், ஒவ்வொன்றுக்கும் நேரம் காலத்தை ஏற்படுத்தி வைத்ததற்கு காரணம் உண்டு. தினமும் அதிகாலை நேரத்தில் வளி மண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகமாகவும் மாலை நேரத்தில் குறைந்து இரவில் வெகுவாகக் குறைந்து இருப்பதாகவும் இன்றைய அறிவியல் சொல்கிறது.
நம் மூளையின் இயக்கத்திற்கு ஆக்ஸிஜன் அவசியம். நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு அதிகமாக இருந்தால், மூளையானது சுறுசுறுப்பாக இயங்கும். குறைந்தால் சோர்வடையும். இப்போது யோசித்துப் பாருங்கள். மூளை சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் முக்கியமான விஷயங்களைச் செய்யும்போது அவை நன்றாகப் பதியும். எளிதாக மனம் ஒருமைப்படும் அதனால்தான் அதிகாலையில் முக்கியமானவற்றைச் செய்யச் சொன்னார்கள்.
மாலையில் ஆக்ஸிஜன் குறைவினால் சோர்வு ஏற்படும். அதனால்தான் இரவில் சீக்கிரம் உறங்கி மூளைக்கு ஓய்வுதரச் சொன்னார்கள். அன்று சொன்னவை அனைத்தும் தெய்வத்தின் பெயரால் சொல்லப்பட்டவை என்றாலும், ஒவ்வொன்றின் பின்னணியிலும் அறிவியல் காரணங்கள் உண்டு. அவற்றை உணர்ந்து அயல்நாட்டினர் இன்று பின்பற்றுகிறார்கள். இனியாவது நாம் புரிந்துகொள்வோம்.
(கட்டுரையாளர்: ஜெயாப்ரியன்/ குமுதம் பக்தி / 14.08.2025)
What's Your Reaction?






