உருளைக்கிழங்கின் தாய் தக்காளியா? புதிருக்கு தீர்வு கண்ட விஞ்ஞானிகள்
உருளைக்கிழங்கு சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தக்காளி செடிகளுக்கும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டுபெரோசம் எனப்படும் இனங்களுக்கும் இடையிலான இயற்கையான கலப்பின நிகழ்வால் உருவாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களுள் ஒன்றாக கருதப்படுவது உருளைக்கிழங்கு. ஆண்டுக்கு சுமார் 350 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும், பல்வேறு கால சூழ்நிலைகளிலும் உருளைக்கிழங்கினை உற்பத்தி செய்ய முடியும்.
உலகளவில் மனிதர்கள் உருளைக்கிழங்கினை அதிகம் நுகர்ந்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த உருளைக்கிழங்கு எங்கிருந்து வந்தன? எப்படி உருவானது? என இவ்வளவு காலமாக பதில் தெரியாமல் புலம்பி வந்தார்கள். நீண்டகாலமாக தாவரவியல் விஞ்ஞானிகளுக்கு சவாலாக விளங்கிய கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
உருளைக்கிழங்கு சுமார் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தக்காளி செடிகளுக்கும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த எட்டுபெரோசம் எனப்படும் இனங்களுக்கும் இடையிலான கலப்பின நிகழ்வால் உருவாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வு குறித்த கட்டுரை செல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு ஷென்செனிலுள்ள வேளாண் மரபியல் நிறுவனத்தை சேர்ந்த சான்வென் ஹீவாங் தலைமை தாங்கியுள்ளார். ஆய்வின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு-
“தக்காளி தாய் மற்றும் எட்டுபெரோசம் தந்தை” என்று ஆராய்ச்சி குழுவை வழிநடத்திய சீனாவின் ஷென்செனில் உள்ள வேளாண் மரபியல் நிறுவனத்தின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் கூறியுள்ளார். உருளைக் கிழங்கு செடிகள், தரைக்கு மேலே எட்டுபெரோசத்தைப் போலவே இருக்கும். ஆனால், நன்றாக உற்று நோக்கினால் இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் தெளிவாகத் தெரியும்.
எட்டுபெரோசத்தில் மெல்லிய நிலத்தடி தண்டுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் மாவுச்சத்து மிக்க உருளைக்கிழங்கு போன்ற கிழங்குகள் எதுவும் இல்லை. தக்காளி செடியினை எடுத்துக் கொண்டால், இதில் கிழங்குகள் எதுவும் உற்பத்தியாகாது. தக்காளி, கத்தரிக்காய், புகையிலை போன்றவை ஒரே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால், அதே நேரத்தில் உருளைக்கிழங்குக்கு ஒத்த மரபணுக்களை தக்காளி மற்றும் எட்டுபெரோசம் ஆகியவை கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
செல் (Cell) இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில், பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்குகளிலிருந்து 450 மரபணுக்களையும் (450 genomes) , 56 காட்டு உருளை வகைகளையும் (wild species) பகுப்பாய்வு செய்தது ஆராய்ச்சிக் குழு.
கிழங்குகளை உருவாக்க இரண்டு மரபணுக்கள் முக்கியமானவை என்பதை ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது. அவை, தக்காளியில் காணப்படும் SP6A மற்றும் எட்டுபெரோசத்தில் காணப்படும் IT1. இந்த இரண்டு மரபணுக்களும் தனியாக எவ்வித மாற்றங்களையும் உண்டுபண்ணுவதில்லை. ஆனால் இந்த இரண்டும் இணையும்போது, உருளைக்கிழங்கு செடியைப் போலவே புதிய பயிரினை உண்டாக்குகிறது. எட்டுபெரோசத்தில் நிலத்தடி தண்டுகளை மாவுச்சத்து நிறைந்த, சுவையான கிழங்குகளை உருவாக்கும் செயல்முறையை கலப்பின நிகழ்வு தூண்டுகின்றன.
உருளைக்கிழங்கு இரு பெற்றோரிடமிருந்தும் சமமான மரபணுக்களை பெற்றுள்ள நிலையில், அவை உறுதியான தாவரமாக மாறியுள்ளது. குளிர்காலம்/வறட்சியை தாங்கி வளரும் தன்மையினையும் பெற்றுள்ளது. விதைகள் அல்லது மகரந்தச் சேர்க்கை போன்றவற்றின் தேவையில்லாமல், தானாகவே இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கின்றன. நாள்பட்ட கிழங்குகளில் முளைக்கும் மொட்டுகளிலிருந்து புதிய தாவரங்கள் வளர்கிறது.
"ஆண்டிஸில் உள்ள பழங்குடி மக்களிடம் நூற்றுக்கணக்கான வகையான உருளைக்கிழங்குகள் உள்ளன" என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியலாளர் டாக்டர் சாண்ட்ரா நாப் கூறியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் உருளைக்கிழங்கு ஆண்டிஸை விட்டு ஸ்பானிஷ் பகுதிகளுக்கு கடல் வாயிலாக சென்றடைந்திருக்கும் என கூறப்படுகிறது. அங்கிருந்து சில ஆண்டுகள் இடைவெளிலேயே ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் ஒரு பிரதான உணவாக உருளைக்கிழங்கு மாறியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உணவுத்தேவையினை கருத்தில் கொண்டு சீன விஞ்ஞானி சான்வென் ஹீவாங் தற்போது “விதைகளால் உருளைக்கிழங்கினை இனப்பெருக்கம் செய்யும் திட்டம்” ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், உருளைக்கிழங்கிலிருந்து IT1 மற்றும் பிற தேவையான மரபணுக்களை சேகரித்து தக்காளியில் செலுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். இந்த சோதனை வெற்றியடையும் பட்சத்தில் தக்காளி உருளைக்கிழங்கின் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக மட்டும் இருக்காது, எதிர்காலத்தில் ஒரு பகுதியாகவும் மாறக்கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆய்வு கட்டுரை தொடர்பான முழுத்தகவலுக்கு: potato evolved from a tomato ancestor
What's Your Reaction?






