சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கு..நீதிமன்றம் கொடுத்த உத்தரவாதம்
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு கடந்த 30 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்க அந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று தொழிற்சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து, நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளையில், ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் வந்ததால் சாம்சங் ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர் விடுமுறைக்கு பின் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?