அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்... வடலூரில் பரபரப்பு!
அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதால் பரபரப்பு.
வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய மனைவியின் தம்பி சீனிவாசன் கடையில் இருந்த போது நெய்வேலி அருகே மேல்பாதி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பூபாலன் என்பவர் காலை 10 மணி அளவில் அரிசி வாங்க வந்தார். அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம் 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசனும் கடையிலிருந்து 16 கிலோ அரிசியை எடை போட்டு பூபாலனிடம் கொடுத்து உள்ளார். பின்னர் சண்முகம் 10:30 மணி அளவில் கடைக்கு வந்தபோது கடையில் இருந்த அரிசி மூட்டைகளை பார்த்தபோது அதில் அந்த பதினாறு கிலோ அரிசி மூட்டை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சீனிவாசனிடம் அரிசி மூட்டை எங்கே என கேட்டபோது அதை வழக்கமாக வந்து அரிசியை வாங்கிச் செல்லும் பூபாலனிடம் விற்று விட்டேன் என கூறினார். உடனே சண்முகம் சீனிவாசனிடம் அதில் 15 லட்சம் பணம் வைத்திருந்தேன் அதை எடுத்து கொடுத்து விட்டாயா என திட்டி பூபாலனின் வீடு எங்கே இருக்கிறது என விசாரணை செய்து அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த அவருடைய மகள் தாட்சாயனிடம் அந்த அரிசி மூட்டையில் பணம் இருந்தது எங்கே என கேட்டபோது தாட்சாயிணி 10 லட்சம் பணத்தை எடுத்து சண்முகத்திடம் கொடுத்தார். இதில் நான் 15 லட்சம் வைத்திருந்தேன் 10 லட்சம் தான் கொடுக்கின்றீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தாட்சாயினி அதில் 10 லட்சம் தான் பணம் இருந்தது என கூறினார்.
இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் சண்முகம் 5 லட்சம் பணத்தை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சண்முகம் 15லட்சம் பணத்தை ஏன் அந்த மூட்டையில் வைத்தார் என தெரியவில்லை இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வடலூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?