பழநி முருகன் கோயில் கடைகளுக்கு மாற்று இடம் வழங்குக – EPS வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்.

Mar 7, 2024 - 11:44
பழநி முருகன் கோயில் கடைகளுக்கு மாற்று இடம் வழங்குக – EPS வலியுறுத்தல்

பழநி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடத்திலிருந்து கடைகளைக் காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மலையடிவாரம், பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை உள்ளிட்ட பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பலர் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேவஸ்தானத்திற்கு அந்த இடங்கள் தேவைப்பட்டதால், வாடகைதாரர்களுக்குக் கடைகளைக் காலி செய்யக்கூறி கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இதற்குக் கடைக்காரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடைகளைப் பூட்டி சீல் வைத்த கோயில் நிர்வாகம், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கடைகளையும் இடித்து அகற்றியது. இந்நிலையில், கோயில் நிர்வாகத்தின் இச்செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரது X தள பதிவில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்கள், அக்கடைகளை நம்பித்தான் வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். எனவே அவர்கள் வியாபாரம் செய்வதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மாற்று இடம் வழங்கப்படும்வரை, அவர்கள் இங்கேயே கடை நடத்த கால அவகாசம் தந்து, அனுமதிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow