மத்திய ஆயுதப்படை கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்… இன்று மாலை தீபம் ஏற்றம்…

உச்சநீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Nov 28, 2026 - 13:01
மத்திய ஆயுதப்படை கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம்… இன்று மாலை தீபம் ஏற்றம்…

திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளது. 

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் மத்திய ஆயுதப்படை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில், தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றக் கிளை கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை.

மேலும், அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருந்தது.தேவைப்பட்டால் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் உதவியை நாடவும் உத்தரவிட்டிருந்தது. அதே வேளையில், தீபத் திருநாளைத் தவிர மற்ற நாட்களில் தீபம் ஏற்ற அனுமதி கிடையாது என்றும், கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள் தவிர மற்ற யாரையும் மலையேற அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

ஆனால், இதன்படி கடந்த 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.மேலும், போலீசார் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மலையேற முயற்சி செய்த இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றப்படாததை உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து, இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் சிஆர்பிஎப் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உத்தரவிட்டது.மலையில் உள்ள தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழு தீபம் ஏற்றும் நேரத்தை முடிவு செய்யவும், நிகழ்ச்சியைக் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முருகன் கோவில் மலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இதனிடையே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரம்பரையாகப் பூஜை செய்யும் உரிமை பெற்ற ஸ்தானிக பட்டர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு ஆலோசனை நடத்தியது. 

இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலையிலேயே பரபரப்பு தொடங்கியது. பக்தர்கள் குவிந்தனர். திருப்பரங்குன்றம் அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியை சிஆர்பிஎப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.திருப்பரங்குன்றத்தில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபத்தூணில் இன்று மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow