திருவண்ணாமலை தீபத்திருவிழா.. 2,668 அடி உயர மலை உச்சியில் அரோகரா முழக்கத்துடன் மகா தீபம் ..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் இன்று (டிச.13) மகா தீபம் 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில், பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் ஏற்றப்பட்டது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் ஒவ்வொருவராக எழுந்தருளினர்.
பின்னர் சரியாக மாலை 5.55 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்ந்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு தாண்டவம் ஆடிய படி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அப்போது கோவிலின் கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சரியாக மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலைமீது அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
2668 அடி உயரமுள்ள மலையின் மீது 5 3/4 அடி உயரமும், 300 கிலோ எடை கொண்ட கொப்பறையில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட 4500 கிலோ நெய் நிரப்பப்ட்டு 1500 மீட்டர் காடா துணியை திரியாக அமைத்து பர்வதராஜ குலத்தினர் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த மகா தீப தரிசனத்தை சுமார் 40 லட்சத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் மலையே மசேகன் என்று அழைக்கப்படும் 14 கி.மீ., தொலைவு உள்ள திருஅண்ணாமலையை அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் அண்ணாமலையார் ஜோதி சுடராய் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?