திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த உருவம்- பரவசமடைந்த பக்தர்கள்..!
கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலில் வீசிச்சென்ற சேதமடைந்த சிலைகள் வெளியே தெரிகின்றன.
திருச்செந்தூரில் 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த உருவத்தை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.அது தவிர விடுமுறை தினங்கள், திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று பௌர்ணமி தினம் என்பதால் நேற்று முன்தினம் முதல் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இன்று சுமார் 50 அடி வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது.இதனால் திருச்செந்தூர் கடற்கரை நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
திருச்செந்தூர் கோவிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்கள் கடல் உள்வாங்கி பகுதிகளில் தெரியும் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி எந்தவித அச்சமுமின்றி செல்ஃபி எடுத்து வருகின்றனர். அவர்களை கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் எச்சரித்து அனுப்பியும் வருகின்றனர்.இதற்கிடையில் கடல் உள்வாங்கி காணப்படுவதால் கடலில் வீசிச்சென்ற சேதமடைந்த சிலைகள் வெளியே தெரிகின்றன. அதில் ஒரு கருப்பசாமி சிலையை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கரையில் எடுத்து வைத்துச் சென்றுள்ளனர். மேலும் திடீரென தெரிந்த சிலையை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். பலர் சிலைகளை வணங்கி சென்றனர்.
What's Your Reaction?