மதுவிலக்கு மாநாடு இதுக்குதான்.. நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் -திருமாவளவன் ஆதங்கம்

தீய நோக்கம் கொண்ட தேசிய கல்விக்கொள்கையை ஆதரிக்கிறார்கள். மதுவிலக்கை எதிர்க்கிறார்கள் என திருமாவளவன் பேச்சு

Oct 2, 2024 - 22:46
மதுவிலக்கு மாநாடு இதுக்குதான்.. நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் -திருமாவளவன் ஆதங்கம்

விசிகவின் மதுவிலக்கு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்து விட்டார்கள் என திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த மதுவிலக்கு மகளிர் மாநாட்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும், தேசிய மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் உள்பட 13 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், தவாக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் பேசிய திருமாவளவன் எம்.பி., “ விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மது ஒழிப்பு என்ற ஒற்றை கோரிக்கையுடன் மாநாடு நடத்தியது விசிக தான். திடீரென மதுவிலக்கு பற்றி விசிக பேசவில்லை. மேலும், மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் நோக்கம் இல்லை. மாமனிதர்களின் கொள்கையை உள்வாங்கியவன் நான். ஞான வம்சத்தில் வந்ததால் மதுவிலக்கு பற்றி பேசுகிறேன். புத்தர், அம்பேத்கர் வழியில் வந்தர்கள் நாங்கள். ஆகையால் சாதி பெருமையோ, மத பெருமை பற்றியோ பற்றி பேசமாட்டோம். மேலும், மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. மதுவிலக்கே ஒற்றை கோரிக்கை. புத்தரோ, இயேசுவோ, இஸ்லாமோ அல்லது மகான்களோ மதுவை ஆதரிக்கவில்லை. மது அருந்தக்கூடாது என வள்ளலாரும், அய்யா வைகுண்டரும் வலியுறுத்தினர். மதுவை தொடாமல் ஒரு மதம் பின்பற்று வருகிறது என்றால் அது இஸ்லாமிய மதம் தான் என பெருமை தெரிவித்தார். மேலும், சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார் எனவும், காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு. ஒன்று மதச்சார்பின்மை, மற்றொன்று காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு. அதனால்தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது.

மது ஒழிப்பு மநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்திவிட்டார்கள்.அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள். மது விலக்கில் திமுகவுக்கும் கொள்கை அடிப்படையில் உடன்பாடு உள்ளது. திமுகவை நிறுவிய அண்ணா மது விலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார். மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீட்டை வழங்க வேண்டும் என கலைஞர் கருணாநிதி வலியுறுத்தினார்.

இளம் வயதில் மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்தால் மனித வளம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. 30  வயதிலேயே தடுமாறுகிறார்கள். 40 வயதில் கல்லீரல் பாதிக்கப்பட்டு சாகும் நிலை ஏற்படுகிறது என்று வேதனை தெரிவித்தார். மேலும் தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி மதுக்கடைகளை நாடு முழுவதும் மூட வேண்டும். மதுவால் இந்துக்களே அதிகளவு பாதிப்பு. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்துக்களை காப்பாற்ற முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார்.

மதுவிற்கு எதிரான போரை பெண்களே முன்னெடுக்க வேண்டும். தீய நோக்கம் கொண்ட தேசிய கல்விக்கொள்கையை ஆதரிக்கிறார்கள். மதுவிலக்கை எதிர்க்கிறார்கள். 9 சோதனைச்சாவடிகளை தாண்டி கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி வந்தது எப்படி? என் சமூகம் பாதிக்கப்படுவதால் போராட்டம் அறிவித்ததாக கீழ்த்தரமாக கருத்து தெரிவிக்கிறார்கள் என திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow