இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்- பாடகர் குருகுகன் கைது

பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த குருகுகனை போலீசார் கைது செய்தனர்

Nov 18, 2024 - 16:08
இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்- பாடகர் குருகுகன் கைது

சாப்ட்வேர் என்ஜினியரான இளம்பெண் புகாரில் பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு தேடி வந்த நிலையில், பாடகர் குருகுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்  குரு குகன்(26). இவர் தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பாடகராக பங்கேற்று பிரபலமானவர்.சென்னையில் வாரந்தோறும் நடக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியிலும் பல இசையமைப்பாளர்களின், நேரலை இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், பாடகர் குரு குகன் மீது பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற வங்கி மேலாளரின் மகளான இளம்பெண் அளித்த புகாரில் குரு குகன் தனக்கு இசை நிகழ்ச்சி ஒன்றில் கடந்த மே மாதம் அறிமுகமானதாகவும், சில நாட்களிலேயே தன்னை திருமணம் செய்து கொள்வதாக தன்னிடம் கேட்டதால், தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு தான் கூறியதாகவும், தனது பெற்றோரை வந்து சந்தித்த குரு குகன், உங்களது மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் தான் பார்க்க மாட்டேன். அவரை திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து,  காதலர்களாக பழகி வந்த நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை சந்திக்க வந்த குருகுகன் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், சீக்கிரமாகவே இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தன்னை சமாதானப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். தனது பெற்றோரை சம்மதிக்க வைக்க தாமதமாகிறது என்ற காரணங்களை கூறிவந்த பாடகர் குரு குகன், தான் கருவுற்று இருந்ததை கூறியதால் தன்னை வெளியில் அழைத்துச்செல்வதாக கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ததாகவும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.

இது தொடர்பாக பரங்கிமலை மகளிர் காவல் நிலைய போலீசார், பாடகர் குரு குகன் மீது பொய்யான உத்தரவாதம் கொடுத்து பாலியல் உறவு வைத்துக் கொள்வது, மிரட்டி அவமதித்து ஆதாரங்களை அழிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பாடகர் குரு குகன் அழைத்தனர். ஆனால் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பெருங்குடி பகுதியில் தலைமறைவாக இருந்த குருகுகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow