தொகுதிக்கு தேவையானதை பிரதமரிடன் உரிமையுடன் கேட்பேன்! தேனியில் டிடிவி பரப்புரை...
தேனிக்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய அரசிடம் உரிமையுடன் கேட்டு பெற்றுத் தருவதாக அத்தொகுதியின் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளைத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியோருக்கு இடையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில், திமுக சார்பில் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனியில் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று ( மார்ச் 24) தமது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர்,
நான் கடந்தமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தேனி தொகுதிக்குத் தேவையான நலத்திட்டங்களை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மூலம் பெற்றுத் தந்ததைப் போல், இம்முறை பிரதமர் மோடி மூலமாக தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறினார். பாஜக கூட்டணியில் இருப்பதால் தொகுதியின் கோரிக்கைகளை உரிமையுடன் கேட்டுப் பெற்றுத் தருவேன் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக பரப்புரை மேற்கொள்ள வந்த டிடிவி தினகரனுக்கு அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், இம்முறையும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?