"ஒரே குடும்பமாக மக்கள் சேவை... குடும்ப அரசியல் இல்லை.." - அமைச்சர் துரைமுருகன் புது விளக்கம்...

கடைசித் தருணம் வரை தான் திமுகக்காரர்தான் என்று மேஜையைத் தட்டி அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்

Mar 24, 2024 - 12:49
Mar 24, 2024 - 12:54
"ஒரே குடும்பமாக மக்கள் சேவை... குடும்ப அரசியல் இல்லை.." - அமைச்சர் துரைமுருகன் புது விளக்கம்...

வாணியம்பாடியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் துரைமுருகன், ஒரே குடும்பமாக மக்கள் சேவை செய்வது எப்படி குடும்ப அரசியல் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய துரைமுருகன், கிருஷ்ணகிரியில் தென் பெண்ணை ஆற்றில் வெள்ளம் வரும் போது சாத்தனூர் சென்று கடலில் கலக்கிறது. அதில் ஒரு பகுதியை படேதளா ஏரிக்கு கொண்டு வந்து, அங்கிருந்து காக்கங்கரை ஏரி வழியாக பாலாற்றுக்கு  ஒரு கால்வாய் வெட்டி திருப்பி விட்டால், எப்போதும் பாலாற்றில் தண்ணீர் ஓடிகொண்டே இருக்கும் என்று பேசினார். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள் பணி செய்ய முன்வரும் போது அதை எப்படி வாரிசு அரசியல் என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நேரு குடும்பமும், கருணாநிதியின் குடும்பமுமே சிறந்த எடுத்துக்காட்டு என்று பேசினார். 

நன்கு ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்தான் நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று பேசிய அவர், கதிர் ஆனந்த் அதற்குத் தகுதியுள்ள வேட்பாளர் என்றும்  கூறினார். திமுகவை நசுக்கிவிடுவோம் என்று சிலர் பேசியுள்ளார்கள், திமுக என்ன பூச்சியா நசுக்குவதற்கு என்று கேள்வி எழுப்பினார். டெல்லியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றாலும் முதலமைச்சர் ஸ்டாலினின் உதவி தேவை என்றும் அவர் பேசினார். தமது கடைசித் தருணம் வரை திமுகக்காரர்தான் என்றும் மேஜையைத் தட்டி, ஆவேசமாகப் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow