தவெக மாநாட்டுக்கு போறீங்களா? அப்போ கட்சி தலைவர் விஜய் சொன்ன இந்த மெசேஜ் உங்களுக்குதான்!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் பயண பாதுகாப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரும் பயண பாதுகாப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் தாங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் எனவும், இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல, வரும் வழிகளில் பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும் எனவும், போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன் எனவும் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் எனவும் தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாநாட்டிற்காக காவல்துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் திண்டிவனம் சென்று அதன் பிறகு கிளியனூர் வழியாக திரும்பி பாண்டிச்சேரி வழியாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் கூட்டேரிப்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டு, விழுப்புரம் நோக்கி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், திருச்சியில் இருந்து வரும் வாகனங்கள் விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு திருப்பி விடப்பட்டு சென்னைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






