ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி குளறுபடி.. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.67,000 வழங்க உத்தரவு.. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி..
ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத கரூரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு ரூ.67,000 இழப்பீடு வழங்குமாறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மழை கொட்டி தீர்த்ததால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி சென்னை ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க திட்டமிட்ட நிலையில் அதிகமானோர் திரண்டதால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்தவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்த குளறுபடிக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பிய சுமார் 4,000 பேருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான், டிக்கெட் பணத்தை திரும்ப வழங்கினார்.
இதனிடையே கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் - திருப்பதி லே அவுட் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் ஏசிடிசி நிறுவனத்தின் மீது கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏசிடிசி ஸ்டூடியோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு இன்று (மே 3) விசாரணைக்கு வந்தபோது, ஏசிடிசி நிறுவனம் நுகர்வோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க தவறியது. இதனால், நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏசிடிசி நிறுவனத்தின் சேவை குறைபாடுதான் காரணம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அஸ்வின் குடும்பத்தினருக்கு டிக்கெட் தொகையான ரூ.12 ஆயிரத்துடன் இழப்பீடாக ரூ.50,000 மற்றும் செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் ரூ.67,000 வழங்க வேண்டும் என ஏசிடிசி நிறுவனத்திற்கு கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?