தங்கத்தின் விலை: என்ன சார் நடக்குது? ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 உயர்வு
கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்றைய தினம் வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலையானது, கிராமுக்கு ரூ.9,000-த்தை தாண்டிய நிலையில் இன்று சவரன் 75,000 ரூபாயினை நெருங்கியுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது இருந்தே உலகளவில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டது. அதில் தங்கமும் தப்பவில்லை. தற்போது வரி விதிப்பு உத்தரவினை இடைநிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் கொஞ்சம் உயிர்ப்பெற்றது. இருப்பினும் தங்கத்தின் விலை மட்டும் தினசரி புதிய உச்சத்தை தொட்டு வந்தது.
சென்னையில் தங்கத்தின் விலை என்ன?
நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9015 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.275 வரை அதிகரித்து ரூ.9,290 ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையானது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. சவரனுக்கு ரூ.2200 வரை அதிகரித்து சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.74,320 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையானது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமுமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.111 ஆக சென்னையில் தற்போது விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






