சூர்யா இருக்கும்பொழுது நான் புகைப்பிடிக்கமாட்டேன்.. மனம் திறந்த இயக்குநர் பாலா
நான் புகைப்பிடித்தால் சூர்யா வருத்தப்படுவார் என்பதால் அவர் முன் புகைப்பிடிக்க மாட்டேன் என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாலாவின் 25-ஆம் ஆண்டு திரைப்பயணமும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா, சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை வாழ்த்தும் விதமாக நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார், இயக்குநர் பாலாவிற்கு தங்க சங்கிலியை பரிசாக அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா பேசியதாவது, பாண்டி பஜாரில் இருந்து திரைப்பட விழா ஒன்றுக்கு சூர்யாவிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டேன். அந்த பயணத்தின் போது தான் என்னுடைய அடுத்த படத்திற்கு கதாநாயகனாக அவரை முடிவு செய்தேன். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அதை அவரிடம் தெரிவித்தேன். சூர்யாவோடு பணியாற்றும் பொழுது ஒரு நடிகரோடு பணியாற்றுவது போல் இருக்காது என் தம்பியோடு பணியாற்றுவது போல் இருக்கும்.
சூர்யா என்னிடம் வெளிப்படையாக இருப்பார். அவர் நான் இயக்கிய அவர் நடிக்காத படத்தில் கூட அண்ணா இந்த படம் நீங்கள் எடுத்தது போல் இல்லை என்று வெளிப்படையாக கூறுவார். சூர்யா இருக்கும்பொழுது நான் புகைப்பிடிக்க மாட்டேன். அதற்குக் காரணம் சிகரெட் பிடிக்கும் பொழுது அதை பார்க்கும் மற்றவர்கள் அட்வைஸ் தான் செய்வார்கள், ஆனால் சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார். ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது தம்பியாக இருந்தால் மட்டுமே வருத்தப்பட முடியும்.
அப்படியும் ’அவன் இவன்’ திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வந்த பொழுது அவருக்கு தெரியாமல் பெரிய மானிட்டர் பின்பு சிகரெட் அடித்துக் கொண்டிருந்தேன். அதனையும் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுபிடித்து விட்டார். அந்த சிறப்பு காட்சியை நடித்து முடித்ததற்கு பிறகு நான் சிகரெட் பிடிப்பதை குறைத்து விட்டேன் என்று கூறினேன். அப்பொழுது இல்லை அண்ணா நீங்கள் இந்த காட்சியை எடுக்கும் பொழுது எட்டு முறை சிகரெட் அடித்தீர்கள் என கூறினார். நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே எத்தனை முறை சிகரெட் அடித்தேன் என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார் என்று கூறினார்.
What's Your Reaction?