பாலாவின் அழைப்பு என் வாழ்க்கையை மாற்றியது- சூர்யா நெகிழ்ச்சி
வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா, இயக்குநர் பாலா குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாலாவின் 25-ஆம் ஆண்டு திரைப்பயணமும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா பேசியதாவது, கடந்த 2000-ஆம் ஆண்டு நெய்க்காரப்பட்டியில் படப்பிடிப்பு ஒன்றில் இருக்கும் பொழுது ஒரு அழைப்பு வந்தது. சூர்யா நீ எந்த ஒரு படமும் கமிட் பண்ணிக்க வேண்டாம், நாம் அடுத்து படம் பண்ணுவோம் என்று சொன்னார். அந்த போன் காலை இன்று வரை என்னால் மறக்க முடியாது. அந்த அழைப்பு தான் என் வாழ்க்கையே மாற்றியது. சேது படம் பார்த்த பிறகு அதில் இருந்து வெளி வருவதற்கு 100 நாட்கள் ஆகியது. அப்படி ஒரு படைப்பிற்கு பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை.
என்னை நானே புரிந்து கொள்வதற்கு முன்பாக என்னை வைத்து திரைப்படம் இயக்க முன்வந்தவர் பாலா. அப்போது, இந்த கால் வரவில்லை என்றால் நான் இந்த இடத்தில் கிடையாது. என்னை முதல் முதலில் புகை பிடிக்க வைத்தது இயக்குநர் பாலா தான். ’நந்தா’ படத்தில் எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாது ஆனால் முதல் நாள் முதல் காட்சியை நான் படிக்கட்டில் இறங்கி சிகரெட் பிடிக்க வேண்டும். முதல் முதலில் ஒரு மிகப்பெரிய பட வாய்ப்பு அத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லை என அவர்களிடம் கூற கூச்சமாக இருந்தது இருப்பினும் அதனை தெரிவித்தேன். ஒட்டுமொத்த லைட் யூனிட்டும் கீழே இறங்கி விட்டார்கள் எனக்கு பேர் அவமானமாக இருந்தது.
உடனடியாக அதை கற்றுக்கொள்வதற்காக 300 தீக்குச்சியை நான் செலவழித்து மாடியில் ஏறி இறங்கி அதனை கற்றுக் கொண்டேன். அதுதான் ரோலக்ஸ் படத்திற்கு உதவியாக இருந்தது.’நந்தா’ படம் பார்த்து பின்பு தான் கெளதம் வாசுதேவ் மேனன் ’காக்க காக்க’ படத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். ‘காக்க காக்க’ பார்த்த பிறகுதான் ஏ.ஆர்.முருகதாஸ் ’கஜினி’ திரைப்படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பாலா உறவுகளுக்கு மதிப்பளிக்க கூடியவர். அண்ணா என்று சொல்வது வெறும் வார்த்தை அல்ல, அது பெரிய உறவு. எப்பவும் நிரந்தரமாக இருக்கின்ற அண்ணன்- தம்பி உறவு கொடுத்த அண்ணா பாலாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்று பெருமையுடன் கூறினார்.
What's Your Reaction?