வி.சி.க.வினருக்கு பதவி ஆசை கிடையாது...வன்னி அரசு பரபரப்பு பேட்டி!
தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, எஸ்சி/எஸ்டி மாணவர்களின் உதவித்தொகை உயர்வு, விசிக கூட்டணி மாற்றம், திமுகவுடனான உறவு, கூட்டணிக் கட்சிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் தவெக மீதான விமர்சனங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்ததில் இருந்து வி.சி.க.வின் ஒவ்வொரு அசைவும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. இந்த சூழலில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
எஸ்.சி/எஸ்.டி. கல்லூரி மாணவர்களுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளதே?
"அமைச்சரானதும் கிடப்பில் உள்ள நீண்டகால கோரிக்கைகளை செயல்படுத்த முனைந்தேன். மாணவர்களின் விடுதிக் கட்டணம் உதவித்தொகை அயலக உதவித்தொகை என எல்லாவற்றையும் உயர்த்த வேண்டுமென அதிகாரிகளிடம் சொன்னபோது, 'இந்த பட்ஜெட்டில் முடியாது என்றனர். பின்பு முதல்வரை சந்தித்து இதை சொன்னேன்.
உடனே அவர், 'வன்னி அரசு சொல்வதைக் கேட்டு விரைவில் செயல்படுத்துங்கள் என்றார். அதன்படி 15 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்சி/ எஸ்.டி மாணவர்களின் உதவித்தொகையை 10,000 ரூபாய் உயர்த்திக் கொடுத்துள்ளோம்"
அமைச்சர் பதவிக்காகத்தான் வி.சி.க. கூட்டணி மாறியதாக தே.மு.தி.க. பிரேமலதா விமர்சித்திருக்கிறாரே?
"எங்களுக்கென குறிப்பிட்ட வாக்கு வங்கியும் பொதுச் சமூகத்தில் நல்ல மதிப்பீடும் உள்ளது. எங்களுடைய மதிப்பீடு அவர்களுக்கும் கிடைக்கும் என எங்களை அழைக்கின்றனர். 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என வி.சி.க. சொல்வது எல்லாருக்காகவும்தான். எங்களுடைய தொடர் முழக்கத்தால்தான் இன்றைக்கு காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது.
பத்து ஆண்டுகள் தேர்தல் புறக்கணிப்புப் பாதையில் இருந்த வி.சி.கவினரை எங்கள் தலைவர், பதவி ஆசையோடு வராதீர்கள்; வாக்கரிசி போட்டுவிட்டு, சாகவும் தயாராக வாருங்கள்' என்றழைத்தார். நாங்கள் அப்படி வந்தவர்கள். ஒரே நேரத்தில் திமுக. அதிமுகவுடன் கூட்டணி பேசி, ஒரே இரவில் கூட்டணி மாறியவர்கள் தேமுதிகவினர். நாங்கள் அப்படி செய்யவில்லையே!"
கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மற்ற கட்சிகளைவிட வி.சி.க. மீது மட்டும் ஏன் இத்தகைய தொடர் விமர்சனம்?
"ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் கட்சி வி.சி.க. கருத்தியல் ரீதியாக உறுதியாக குரல் கொடுப்பவர் எங்கள் தலைவர் திருமாவளவன். ஆக எங்களை தனிமைப்படுத்த அஜெண்டா கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், வி.சி.க சராசரி கட்சி அல்ல. மற்றவர்களைப்போல் பதவிக்காகவும் பவுசிற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட கட்சி இது இல்லை. நாளைக்கே நாங்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு தேர்தல் புறக்கணிப்புப் பாதைக்கு செல்வோம். எங்களை விமர்சிப்பவர்கள் அவ்வாறு செய்வார்களா?"
சட்டமன்றத்தில் சாலைகளின் நிலையை கடுமையாக விமர்சித்திருந்தீர்களே?
"அமைச்சரானதும் முதலில் போன ஊர் பழங்குடியினர் வசிக்கும் ஈரோடு மாவட்டம், காளிதின்பம் கிராமம். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி, 'நாங்கள் ரோடு போட்டோம். எல்லா வசதிகளும் செய்து கொடுத்திருக்கோம்' என்றார்கள். அதனால்தான் அந்த கிராமத்தைக் குறிப்பிட்டு, அங்க ரோடு எந்த லட்சணத்தில் இருக்குன்னு தெரியுமா?' என பேசினேன். இன்றைக்கும். பல கிராமங்களில் பஸ், ரோடு, தண்ணீர் எதுவும் இல்லை. இது திராவிடக் கட்சிகளின் குறை என்று மட்டும் சொல்லவில்லை. 80 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் அவலம்"
சட்டமன்றத்தில் 'எனக்கும் ஆசான் திருமா தான்' என உதயநிதி கூறியது பற்றி?
"அதை நானே எதிர் பார்க்கவில்லை. உதயநிதி திண்டிவனத்தில் எனக்காக பரப்புரை செய்தார். அப்போது, 'அண்ணன் வன்னி அரசுவின் வெற்றி என் வெற்றியைவிட முக்கியம் என்றார். இதனால் உற்சாகமடைந்த நாங்களும் திமு.க.வினரும் பரஸ்பரம் வெற்றிக்காக உழைத்தோம். ஆக, உங்கள் ஓட்டு எங்களுக்கு எங்கள் ஓட்டு உங்களுக்கு... என சொல்லி நன்றி தெரிவித்தேன்.
ஆனால் நீங்கள் நன்றி சொல்லவில்லையே' என எதார்த்தமாக கேட்டேன். அதற்கு உதயநிதி உடனே எழுந்து, 'என் ஆசானும் திருமா தான். அவருக்கு நன்றி என்றார். அவர் அப்படி சொன்னதில் மிகுந்த மகிழ்ச்சி. இதன் மூலம் தி.மு.க. வி.சி.க. உறவு எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ளலாம். சில விமர்சனங்கள் இருந்தாலும் தி.மு.க. எப்போதுமே நாங்கள் நேசிக்கும் தோழமைக் கட்சிதான்."
தி.மு.க.வில் ஆ.ராசா பேசியது சமீபத்தில் சர்ச்சையானது பற்றி...
"ஆராசா, சேகர்பாபு போன்றவர்கள் கவன ஈர்ப்புக்காக இப்படி பேசுகிறார்கள். பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே இப்படி பேசுவதால் அவர்கள் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிராக இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. தி.மு.க.வில் எல்லாரும் அப்படி பேசுவதில்லை. ஆனால், ஒரு சிலர் இவ்வாறு பேசுவதை திமுக கண்டித்து கட்டுப்படுத்த வேண்டும்."
'கூட்டணிக் கட்சிகளை தி.மு.க. சரியாக கையாளவில்லை. அதனால் தான் கூட்டணியில் விரிசல்' என திருமா கூறியிருக்கிறாரே. இதை ஏன் முன்பே சொல்லவில்லை?
"கூட்டணியில் இருந்துகொண்டே இதை சொல்வது ஏற்புடையதாக இருக்காது. இப்போதுதான் அதை சொல்வதற்கான காலம் வந்திருக்கிறது. கூட்டணியில் இருந்ததுமே எல்லாக் கட்சிக்கும் திமுகவுடன் முரண்கள் இருந்தன. "நீண்டகாலம் பயணித்த வி.சி.க. கம்யூனிஸ்டுட்களுக்கு ஏன் குறைவாக சீட் கொடுக்கிறீர்கள்? என்ற கேள்வியும் எழுந்தது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை தராமல் வெற்றிபெறும் தொகுதிகளை அவர்கள் எடுத்துக்கொண்டு, தோற்கும் தொகுதிகளை எங்களுக்கு தந்தார்கள். மனக் கசப்பு இருந்தாலும் வெளியேறாமல் இருந்தோம். தி.மு.க. இதை சரிசெய்திருக்க வேண்டும்."
'த.வெ.க. மீது வரும் விமர்சனத்திற்கு அக்கட்சியினரைவிட வன்னி அரசுதான் உடனடி பதில் தருகிறார்' என விமர்சனம் வருகிறதே?
“ஒரு தவறு நடக்கிறது எனில் வேறு யாராவது கண்டிப்பார்கள் என கடந்து செல்ல முடியுமா? 'எலும்பை முறிப்பேன்' என்று சொன்னதை விமர்சிக்காமல் சென்றால் நாளை என்னையும் கூட அவ்வாறு விமர்சிக்கலாம். அதனால், தட்டிக் கேட்டேன்."
வி.சி.க.விலேயே மாறுபட்ட கருத்துகளும் குழப்பங்களும் நிலவுகிறதே?
"வி.சி.க. ஜனநாயகக் கட்சி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கலாம். எங்கள் தலைவரின் கருத்தே இறுதியானது"
(குமுதம் செய்திகளுக்காக ச.ரம்யா)
What's Your Reaction?