நெல்லை மாநகராட்சி மேயரின் பதவி தப்புமா? -ஜன.12ல் வாக்கெடுப்பு 

ஜனவரி 12-ம் தேதி நடைபெற உள்ள நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Dec 30, 2023 - 18:22
நெல்லை மாநகராட்சி மேயரின் பதவி தப்புமா? -ஜன.12ல் வாக்கெடுப்பு 

நெல்லை மாநகராட்சி மேயரின் பதவி தப்புமா? ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜன.12ல் வாக்கெடுப்பு நடத்த மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு

நெல்லை மாநகரில் உள்ள 55 வார்டுகள் உள்ளடக்கிய நெல்லை மாநகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை மாற்றக்கோரி தொடர்ச்சியாக அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாநகர திமுகவில் நிலவும் உள்கட்சி பூசல் காரணமாகவே ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது மேயர் சரவணன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் மாநகராட்சி மன்ற கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றனர். 

மோதல் போக்கை கைவிடும்படி மேயர் மற்றும் கவுன்சிலர்களை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் எச்சரித்திருந்தார். இருப்பினும் அமைச்சர் பேச்சையும் மீறி தொடர்ந்து கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற சூழ்நிலையில் நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்படி சுமார் 38 திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராவை சந்தித்து கடந்த சில வாரங்களுக்கு முன் மனு அளித்த சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

 சட்டப்படி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்படி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தால் 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்புவதுடன் ஒரு மதத்திற்குள் சிறப்பு கூட்டத்தை நடத்தி தீர்மானத்தை அவையில் கொண்டு வர வேண்டும் என்பது விதிமுறை ஆகும் இந்த நிலையில் கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் கொண்டுவர மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 அதன்படி  தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 51 (2) (3)ன் கீழ் மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் கணக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் வரும் ஜன.12ம் தேதி நடைபெறும் என ஆணையர் சுபம் தாக்கரே ஞானதேவ்ராவ் அறிவித்துள்ளார். 

ஆளுங்கட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது இதுவே முதல் முறை ஆகும். எனவே வரும் ஜனவரி 12-ம் தேதி நடைபெற உள்ள நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் ஆளுங்கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் கவுன்சிலர்களை சரிகட்டும் பணிகளில் திமுக தலைமை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே  ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயர் மீதான பகையை தீர்த்துக் கொள்ளும் வகையில் அவருக்கு எதிராக வாக்களிப்பார்களா அல்லது கட்சி தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு மேயருக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow