"ரோல்மாடல் எம்.பியாக இருப்பேன்".."துறைமுக தொழிலாளர்களை காப்பேன்".. பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் உறுதி
பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றாமல், ஒரு ரோல்மாடல் எம்.பியாக இருப்பேன் என்று வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
பாஜக சார்பாக வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பால் கனகராஜ், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசார வாகனத்தில் வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் சிறப்பாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு கோரிய பால் கனகராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றாமல், ஒரு ரோல்மாடல் எம்.பி-யாக இருப்பேன் என்றும், காமராஜர், கக்கனை போல், ஒரு எளிய அரசியல் வாதியாக இருப்பேன் என்றும் கூறினார்.
வட சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக நிற்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன் என்றும், தனது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வேன் என்றார். சென்னை துறைமுகம் ட்ரெய்லர் லாரி சங்க உரிமையாளர்கள் தன்னிடம் வைத்த நியாயமான கோரிக்கைகளை, நிச்சயம் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து நிறைவேற்ற முயற்சிப்பேன் என்றும் வாக்குறுதி அளித்தார்.
50 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த சங்கத்தில் இருந்தும், தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிகாட்டிய அவர், பத்தாண்டுகளாக வைக்கப்படும் அவர்களது வாடகை உயர்வு கோரிக்கையை, பேச்சுவார்த்தை நடத்தி உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் பால் கனகராஜ்.
தான், 35 வருடங்களாக வடசென்னை மக்களுடன் பழகியவன் என்றும், அங்கு வாழும் நிறைய குடும்பங்கள், தன்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பாவிக்கிறார்கள் என்றும் அவர் நெகிழ்ச்சிபட கூறினார்.
What's Your Reaction?