‘வறுமையின் நிறம் சிகப்பு’...பாலசந்தர் படம்னா சும்மாவா? கமல் காட்டிய கோபம்!

கே.பாலசந்தரின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படம் தந்த வறுமை, வேலையின்மை, கோபம் மற்றும் மனவலியை நினைவுகூரும் சினிமா அனுபவம் குறித்து இந்தப் பதிவு விளக்குகிறது.

Sep 21, 2026 - 21:00
‘வறுமையின் நிறம் சிகப்பு’...பாலசந்தர் படம்னா சும்மாவா? கமல் காட்டிய கோபம்!

கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா! - வி.ராம்ஜி

சினிமாவுக்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, படைப்பாளிகள் தங்களுக்கான கோபங்களை, சமூக அவலங்களை அவரவர் பாணியில் சொல்லி வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள். ‘இப்படிலாம் நடக்குமா?’ என்று நம்மைக்கேள்வி கேட்க வைத்துவிட்டு, ‘காலம் கலிகாலம்யா. இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யுது’ என்று நம்மையே பதில் சொல்லவைத்தார்கள். அவர்களில் மிக மிக முக்கியமானவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

தமிழ்த் திரையுலகில் 100 படங்களை இயக்கிய டைரக்டர்கள் இரண்டுபேர். ஒருவர் இராம.நாராயணன். இன்னொருவர் கே.பாலசந்தர். ஆனால் இந்த இரண்டு பேருக்குமாக ஆறு வித்தியாசங்கள் அல்ல... ஆறாயிரம் வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

எம்ஜிஆர் படம், சிவாஜி படம் என்று சொல்லி படம் பார்த்தார்கள் ரசிகர்கள். அதற்கு முன்னதாக, ஏவிஎம் படம், பட்சிராஜா படம், சிட்டாடல் கம்பெனி படம் என்று தயாரிப்பு நிறுவனங்களைக்கொண்டு படத்தின் தரத்தை தராசுத் தட்டில் வைக்காமலேயே உறுதி செய்தார்கள். ‘இது இந்த டைரக்டர் படம்’ என்று ஸ்ரீதருக்குப் பிறகு டைரக்டர்களின் பெயர் பார்த்து, தரம் சொன்னார்கள். அடுத்து கே.பாலசந்தர் அறுபதுகளின் நடுவே அறிமுகமாகி, தொடர்ந்து அந்தப் பெயரை தக்கவைத்துக் கொண்டார். ‘பாலசந்தர் படம்னா பெருசா ஏதோ சொல்வாருப்பா’ என்று முதல்நாள், முதல் ஷோ பார்க்க க்யூவில் நின்ற ரசிகர்கள் ஏராளம்.

எண்பதுகளிலும் கூட பாலசந்திர ராஜ்ஜியம் நீண்டுகொண்டே போனது. பாரதிராஜா, மகேந்திரன், பாக்யராஜ், பாலுமகேந்திரா முதலானோர் வந்துவிட்ட நிலையிலும், கே.பி. எனும் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. கலர்ப்படங்கள் வரத்தொடங்கிய காலத்திலும் கூட, கருப்பு வெள்ளையில் நிறையவே படங்களைக் கொடுத்தார். மிகத் தாமதமாகத்தான் வண்ணத்துக்கு மாறினார். அதில் எண்பதுகளில் வந்த ‘வறுமையின் நிறம் சிகப்பு’, பாலசந்தரின் கோப நெருப்புகளில் ஒரேயொரு கங்கு!

‘காக்காசா இருந்தாலும் கவர்ன்மெண்ட் ஜாப்’, ‘அரைக்காசா இருந்தாலும் அரசாங்க வேலை’ என்றிருந்த காலம் அது. படிக்கணும். படித்த படிப்புக்கு வேலை கிடைக்கணும். அதுவும் அந்த வேலையை அரசாங்கம் கொடுக்கணும் என்றிருந்த தலைமுறை அது. இப்போது சென்னையில் வேலை, ஹைதராபாத்தில் வேலை, பெங்களூருவில் வேலை என்றாகிவிட்டது. அதுவும் தனியார் துறையில்! ஆனால் அன்றைக்கு வேலை என்றால் மும்பைக்கு இல்லையென்றால் டெல்லிக்குப் போகணும்!

பட்டதாரிகளான கமல், எஸ்வி சேகர், திலீப் மூவரும் வேலை தேடி தலைநகரில் டெல்லிக்கு வருகிறார்கள். தனித்தனியாக வந்து, ஒரு தீப்பெட்டி சைஸ் அறையில் தங்குகிறார்கள். பசியை,பட்டினியை,சோகங்களை,வலிகளை, அவமானங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

படிப்பு அவர்களுக்கு வேலை தரவில்லை. சோறு போடவில்லை. ஆனால் கதையின் நாயகி ஸ்ரீதேவிக்கு, அவரின் கலையும் நடிப்பும் சோறு போடுகிறது. திருட்டுத்தனமும் பொய்புனைச்சுருட்டுமாக இருக்கும் அப்பா ஒருவிரல் கிருஷ்ணாராவுடன் ஸ்ரீதேவிக்கு ஏகத்துக்கும் பிரச்னைகள். போதாக்குறை பணக்காரரான நாடக டைரக்டர் பிரதாப் போத்தனின் காதல் டார்ச்சர் வேறு.

’என்ன செஞ்சாவது முன்னுக்கு வந்துடணும்’ என்று சந்தர்ப்பம் பார்க்கிற திலீப். ‘ஏதாவது நல்லது நடக்காதா?’ என்று கனவு காண்கிற எஸ்வி சேகர். ‘இப்படித்தான் வாழணும், நேர்மையா இருக்கணும்’ என்று கம்யூனிஸம் பேசும் கமல். இவர்களுக்கு நடுவே, வாய் பேசமுடியாத அதே சமயம் கைகளில் கலைவண்ணம் காட்டுகிற ஓவியர்! இவர்கள் தான் வறுமைக்கு வாக்கப்பட்ட மாந்தர்கள்!

’படத்தில் எந்தக் காட்சி பிடிக்கும்’ என்று கேட்டால், பதினாலு ரீல்களையும் சொல்லலாம். திருச்சி ஜூபிடர் தியேட்டரில் தான் படம் வெளியானது. தீபாவளி வெளியீடு. ரிலீஸ் அன்று மதியக்காட்சி பார்த்தேன். அப்போது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக்கொண்டிருந்தேன். கமல் படம் என்றால் ஒரு கூட்டம் வரும். பாலசந்தர் படத்தில் கமல் நடித்த படம் என்றால் இன்னும் கூட்டம் அள்ளும். கமலும் ஸ்ரீதேவியும் நடிக்கிறார்கள் என்றால் காணக் கண்கொள்ளாத ஜோடி என்று கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அவ்வளவு ஏன்... ‘கமலும் ஸ்ரீதேவியும் கல்யாணம் பண்ணிக்கணுமே...’ என்று குலசாமியை வேண்டியவர்கள் கூட உண்டு!

‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் பல காட்சிகளைச் சொல்லலாம். வேலை, படிப்புக்கு ஏற்ற வேலை, பட்டதாரிகளுக்கு வேலையில்லாப் பிரச்னை, அப்போதைய காங்கிரஸ் ஆட்சி, கைச்சின்னம் என்று காட்டினார் பாலசந்தர். படத்துக்கு தடை விதிப்பதாகக் கூட பேச்சு செய்திகளாக வந்து, மீண்டும் பரபரப்புப் பேச்சுகளாக வந்தன. படம் ஒரு பானை; அதில் இந்தக் காட்சி ஒரு சோறு பதம்.

’சம்பாதிக்கணும். அவ்ளோதான். அதுக்கு எதுவேணா செய்யலாம்’ என்றிருக்கிற உலகில், கமல் போன்றவர்கள் விதிவிலக்கு. ஆனாலும் வறுமை வயிற்றில் நெருப்பை வளர்க்க, கமலுக்குக் கிடைக்கிறது ஒரு வேலை. ‘எனக்கு டிரைவர் வேலை கிடைச்சிருக்கு. ஆனாலும் ஒரு குத்த உணர்ச்சி. ஒரு பொய் சொல்லிட்டேன்’ என்று ஸ்ரீதேவியிடம் கமல் சொல்லுவார். ‘என்ன... தெரியாததை தெரியும்னு சொல்லிட்டீங்களா?’ என்று கேட்பார் ஸ்ரீதேவி. ‘தெரிஞ்சதை தெரியாதுன்னு சொல்லிட்டேன்’ என்பார் கமல். ‘தமிழ் தெரியக்கூடாது. அப்பதான் வேலைன்னு சொன்னாங்க. தமிழ் தெரியாதுன்னு பொய் சொல்லிட்டேன்’ என்பார் கமல்.

கார் டிரைவராக கமல். பின்பக்கத்தில் முதலாளியும் அவருடைய மனைவியும்! டெல்லி மாநகரில் கணவனும் மனைவியும் தமிழில் பேசிக்கொள்வார்கள். பங்களா ஒன்றில் கார் நிற்கும். மனைவி இறங்குவார். கணவன் காரிலேயே இருப்பார். கார் நகரும். சில மணி நேரங்கள் கழித்து, அந்தக் கணவர், கமல், கார்... அந்த பங்களாவின் போர்டிகோவில்! மனைவி வந்து ஏறுவார். எடுத்துச் சென்ற ஃபைல்களை கணவரிடம் கொடுப்பார். முகத்தை, கழுத்தை, கன்னங்களை புடவைத் தலைப்பால் ஒத்திக்கொண்டு, புடவையை சரிசெய்வார். ‘போன காரியம் காயா, பழமா?’ என்று கணவர் கேட்பார். ‘நான் போனா சக்ஸஸ் ஆகாம இருக்குமா? நீட்டின இடத்துல, டெண்டர்ல கையெழுத்துப் போட்டுட்டான்’ என்பார் மனைவி.’என் அதிர்ஷ்ட லட்சுமி நீதானே?’ என்று மனைவியைப் புகழ்வார். ‘ஆனா என்ன... பயங்கர மிருகம். 

காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கிட்டான். ச்சீ..! பத்துலட்ச ரூபா காண்ட்ராக்டாச்சேனு பொறுத்துக்கிட்டேன்’ என்று அலுப்பும் ஜெயிப்புமாக மனைவி சொல்ல... அதுவரை தமிழில் பேசிக்கொண்டே வந்தவர், தடக்கென இந்தியில் பேசுவார். ‘தமிழிலேயே இருக்கட்டும்’ என்று மனைவி அதட்டுவார். தமிழ்க்காரரான, தமிழரான, தமிழ் தெரியாது என்று பொய் சொன்ன கமலுக்கு, கோபம் பொத்துக்கொண்டு வரும். ஆத்திரம் முகம் முழுக்கக் கொப்புளிக்கும்.

மொத்தக் கோபத்தையும் ஆவேசத்தையும் காரின் வேகம் கூட்டி வெளிப்படுத்துவார் கமல். நட்ட நடுரோட்டில், எவருமே இல்லாத இடத்தில், கடைகண்ணிகள் கூட பொட்டல் பகுதிக்கு அருகில் காரை நிறுத்தி இறங்குவார் கமல். ‘கோன்... கோன்’ என இந்தியில் அந்தக் கணவன் கேட்க, தமிழில் கேவலமாகத் திட்டிப் பேசுவார் கமல். ‘காசு வேணும்னா பொண்டாட்டியவே இப்படி அனுப்புவியா? அப்படியொரு பொழப்பு வேணுமா? இப்படித்தான் பகட்டா வாழணுமா?’ என்றெல்லாம் கேட்காமல், பார்வையிலேயே அவர்களை எரித்துப் பொசுக்குவார்.

‘நீ தமிழா? எங்களை விட்டுட்டு நீபாட்டுக்கு போறே? எனக்கு கார் ஓட்டத்தெரியாதுடா’என்று அந்தக் கணவன் சொல்லுவான். ‘சாவுங்கடா’ என்று சொல்லிவிட்டு கமல் வேக வேகமாக நடப்பார். அந்த நடையில் கோபத்தில், ஆவேசத்தில், கேவலத்தில்... பின்னாளில் கமலுக்குப் பதிலாக பாலசந்தர் நடந்து செல்வதாக உணர்ந்தேன்.

படத்தின் கடைசியில், ஆளாளுக்கு ஒவ்வொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ள, கமல் சலூன்கடை வைத்து பொழைப்பை ஓட்டுவார்.’நாலாம் தலைமுறையைப் பார் நாவிதனும் சித்தப்பனாவான்’ என்ற பாலசந்தரின் வசனம், என்னை அப்பவே உலுக்கியது.

தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு, மைசூர்பாகு, குலோப்ஜாமூன் என்றெல்லாம் இனிப்பும் உறைப்புமாக ரசித்து ரசித்து சாப்பிட்டுவிட்டு,  திருச்சி ஜூபிடரில் மேட்னி பார்த்தேன். படம் பார்த்த அடுத்த ஆறேழு நாட்கள் ‘ஏண்டா வயித்துல எதுனா பிரச்னையா? வலியா? சரியாவே சாப்பிட மாட்டேங்கிறே?’ என்று அம்மா திரும்பத்திரும்பக் கேட்டாள்.

அது மனசின் வலி என்பதை அந்த வயதில் சொன்னால் அம்மாவுக்குப் புரிந்திருக்குமா? அல்லாது புரியும்படி இப்போது சொல்லுவது போல்தான் அப்போது என்னால் சொல்லியிருக்கமுடியுமா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow