மகளிர்கள் எல்லாம் ரெடியா? ஆரம்பமாகும் வெற்றிப் பயணம் திட்டம்...முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

Oct 2, 2026 - 10:31
மகளிர்கள் எல்லாம் ரெடியா? ஆரம்பமாகும் வெற்றிப் பயணம் திட்டம்...முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!
WomenFreeBus

தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண விரிவாக்கத் திட்டமான 'வெற்றிப் பயணம்' திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (அக்.2) சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'விடியல் பயணத் திட்டத்தில்' மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசுப் பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாகப் பயணிக்க முடிந்தது. தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அமுலுக்கு வந்துள்ளது.

இன்று காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் நேரடியாக ஏறி ஆய்வு செய்த அவர், மின்னணு பயணச்சீட்டு எந்திரம் (ETM) மூலம் பெண் பயணிகளுக்குத் தன் கரங்களால் இலவச டிக்கெட்டுகளை வழங்கி பயணத்தைத் தொடங்கி வைத்தார்.டிக்கெட் கொடுத்த முதலமைச்சர் விஜய்க்கு பேருந்தில் இருந்த பெண்கள் சாக்லேட் கொடுத்து உற்சாகம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் இந்த விரிவுபடுத்தப்பட்ட இலவச அரசுப் பேருந்து சேவை மூலம் உடனடியாகப் பயன்பெறத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் விரிவுபடுத்துவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இத்திட்டத்தில் பயன் பெற எந்தவித வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளோ கிடையாது.

பெண்களுடன் சேர்ந்து திருநங்கைகளும் இத்திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் பயணிக்க முடியும். இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும் என மதிப்பிட்டுள்ளது. மேலும், இச்சேவை எதிர்காலத்தில் பிற போக்குவரத்துச் சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சாதாரண நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதிப் பேருந்துகளுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ-க்கும் அதிகமான மலைப்பகுதிப் பேருந்துகளுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், மொத்தமுள்ள 18,413 அரசுப் பேருந்துகளில் 12,695 பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தினமும் இயக்கப்படும் 1,68,500 நடைகள் மூலம் நாளொன்றுக்குச் சுமார் 84.32 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணித்து பயனடைவார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow