LADIES இனி மொத்த தமிழ்நாட்டையும் FREEயா சுத்தலாம்...நாளை முதல் அமலுக்கு வரும் ‘வெற்றிப்பயணம்’ திட்டம்!

வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய், நாளை (அக்.2) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

Oct 1, 2026 - 09:57
Oct 1, 2026 - 10:13
LADIES இனி மொத்த தமிழ்நாட்டையும் FREEயா சுத்தலாம்...நாளை முதல் அமலுக்கு வரும் ‘வெற்றிப்பயணம்’ திட்டம்!
Women Free Bus

தமிழ்நாட்டில் மகளிரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் நாளை (அக்.2) காந்தி ஜெயந்தி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

முன்னதாக சட்டமன்றப் பேரவையில் 110-வது விதியின் கீழ் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், கட்டணச் சுமையால் தமிழ்நாட்டின் எந்தவொரு பெண்ணும் தங்களுக்கான வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது உள்ளூர் சாதாரண நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதிப் பேருந்துகளில் மட்டுமே மகளிர் இலவசமாகப் பயணித்து வருகின்றனர். இனி இச்சேவை எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ-க்கு அதிகமான தூரம் இயங்கும் மலைப்பகுதிப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

மொத்தப் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துத் துறையின் 18,413 பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69%) இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுகின்றன.

மொத்தமுள்ள 1,94,649 நடைகளில் 1,65,312 நடைகள் (85%) பெண்கள் பயணிக்கும் வகையில் மாற்றப்படுகின்றன. இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காகப் பேருந்துகளிலுள்ள மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் மென்பொருள் இணைப்புகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான சோதனை ஓட்டங்கள் கடந்த செப்டம்பர் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள், மாணவிகள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு அச்சமின்றி எளிதாகப் பயணிக்க முடியும்.

கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 'மகளிர் விடியல் பயணம்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வந்த மகளிர்க்கான இலவசப் பேருந்து சேவை, தற்போது 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் கூடுதல் பேருந்துகளுடன் புதிய பொலிவுடன் மாநிலம் முழுவதும் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow