வனவிலங்கை வேட்டையாடிய அதிமுக நிர்வாகி? வனத்துறை தேடுவதால் தலைமறைவு? சிக்குவாரா அதிமுகவின் சல்மான்கான்?
நீலகிரியில் வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரும் கோடநாடு கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரு சகோதரர்களின் அண்ணணுமாகிய அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளர் சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி, 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் இந்தியாவிலேயே அதிகமான புலிகள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடி, மான் இனங்கள் உள்ளிட்டவை வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சில்வர் கிளவுட் தோட்டத்தில் EPS-ன் நெருங்கிய நண்பரும் அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளருமான சஜீவன், வனவிலங்குகளை வேட்டையாடி தனது வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கோடநாடு கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில், சிபி ஆகியோரின் அண்ணன் சஜீவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சஜீவன் குடியிருப்பில் வனத்துறையினர், சோதனை நடத்திய போது, வாசலில் புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு சஜீவனின் அறையில் மேலும் ஒரு துப்பாக்கி, 11 தோட்டாக்கள், கத்திகள், ரத்தக்கறை படிந்த கோடாரி, காற்று சுழல் துப்பாக்கி உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சஜீவனின் எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை நடத்தியபோது சஜீவனும் அவரது நெருங்கிய நண்பர் சுப்பையா உள்ளிட்டோரும் துப்பாக்கியுடன் எஸ்டேட்டுக்கு சென்று வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து குற்றசெயலில் ஈடுபட்டதாக சஜீவன், பைசல், சாபுஜேக்கப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையறிந்து சஜீவன் உள்ளிட்ட மூவர் தலைமறைவான நிலையில், பைசல், சாபுஜேக்கப், பரமன் ஆகியோரை வனத்துறையினர் கைதுசெய்தனர். தொடர்ந்து வழக்கின் முக்கியக் குற்றவாளியாக சஜீவனை அறிவித்து தனிப்படை அமைத்து அவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக சஜீவன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் அதிமுக கலக்கத்திலேயே உள்ள நிலையில், இவ்வழக்கு மேலும் ஒரு தலைவலியை அக்கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?