விஜய் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சினிமாவில் போதிக்கவில்லை - இயக்குநர் தங்கர்பச்சான் 

மக்கள் திருந்தினால் தான் தேர்தலில் ஆட்சி மாற்றமும் சாத்தியம். கட்சிக்காகவும் சின்னத்திற்காகவும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் மாற்றத்தை அவர்கள் விரும்பவில்லை என தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

Nov 10, 2024 - 15:25
விஜய் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சினிமாவில் போதிக்கவில்லை - இயக்குநர் தங்கர்பச்சான் 

நடிகர் விஜய் மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை சினிமாவில் போதிக்கவில்லை என இயக்குநர் தங்கர்பச்சான்  தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து கட்சி கொடி அறிமுகம், விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாடு, கட்சியின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்கள் குறித்து விஜய் பேசினார்.

மேலும் மாநாட்டில் பேசிய விஜய் திமுக உள்ளிட்ட கட்சிகளை தாக்கி பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்த திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான்,  “ நடிகர் விஜய் திரைத்துறையில் நடிகராக மக்களுக்கு பயனுள்ள கருத்துக்களை எடுத்துச் சொல்லவில்லை என்பதால் கூட தற்போது அரசியலில் கால் பதித்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கலாம்.

அதேப்போல் மக்கள் திருந்தினால் தான் தேர்தலில் ஆட்சி மாற்றமும் சாத்தியம். கட்சிக்காகவும் சின்னத்திற்காகவும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் மாற்றத்தை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார். முன்னதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் சந்தித்து தங்கர்பச்சான் வாழ்த்து தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow