விசிக மது ஒழிப்பு மாநாடு அப்பட்டமான அரசியல் நாடகம் - ஏ.சி.சண்முகம்
புதிய நீதிக்கட்சித் தலைவரான ஏ.சி.சண்முகம் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்தும் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்தும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு ஓர் அப்பட்டமான அரசியல் நாடகம் என்றும் தமிழக அரசியலில் விஜய் புதிய திருப்பத்தை நிகழ்த்துவார் என்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்துக்கிற மது ஒழிப்பு மாநாட்டை அரசியல் நாடகம் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது. ஆளுங்கட்சியான திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே அவர் மது ஒழிப்புக்காக மாநாடு நடத்தப் போவதாகச் சொல்வது அரசியலுக்காகத்தானே அன்றி மக்கள் நலன் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக அல்ல.
உண்மையிலுமே மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற அக்கறை இருந்தால் தனது கூட்டணிக் கட்சியான ஆளூம் திமுகவிடமே நேரடியாகக் கூறலாமே. கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் ஆளும் திமுகவிடம் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூட வேண்டும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கலாம். அப்படிச் செய்யாமல் மது ஒழிப்பு என்பதை தங்களுக்கான அரசியலுக்கான கருவியாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டுதான் மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் கையில் எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது. குற்றங்கள் பெருகுவதற்கு மது ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு மதுவால் கிடைக்கும் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்று வர் கோரிக்கை விடுத்தார். மேலும் அவரிடம், புதிதாகக் கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு...
“புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கும் விஜக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழ்நாட்டு அரசியலில் விஜய் நிச்சயமாக புதிய திருப்பத்தை ஏற்படுத்துவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.
What's Your Reaction?