வாக்காளர் பட்டியலில் எங்க ஏன் பெயர்? தேஜஸ்வி ஆவேசம்.. பீகாரில் தொடரும் குழப்பம்
திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லை என தேஜஸ்வி கூறும் நிலையில், அவரது பெயர் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருதரப்பினரும் வேறு வேறு EPIC நம்பரை குறிப்பிட்டுள்ளதால் பீகாரில் அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது.

243 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் இந்தாண்டு நவம்பர் மாதம், சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைப்பெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ”Special Intensive Revision (SIR)” என்கிற பெயரில் வீடு வீடாக சென்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்கட்சிகள் சார்பில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நீதிமன்றம் வரை சென்றது இந்த விவகாரம். நடைப்பெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பீகாரில் நடைப்பெற்று முடிந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பல்வேறு காரணங்களுக்காக நீக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இறுதி செய்யப்பட்ட திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
தேஜஸ்வி முன்வைத்த குற்றச்சாட்டு:
இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகாரின் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பீகாரில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில் அவர் தேர்தல் ஆணையத்தின் மீது பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
பாட்னாவில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தேஜஸ்வி யாதவ் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) அனைவருக்கும் தெரியும் வகையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளீடு செய்தார். அவர் உள்ளீடு செய்த (EPIC Number- RAB2916120) . அவர் கையில் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டையிலும் இந்த எண் தான் இருந்தது. EPIC Number- உள்ளீடு செய்து தேடிய போது, வாக்காளர் பட்டியலில் அவரது விவரம் இல்லை (No result Found) என திரையில் தோன்றியது.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேசிய தேஜஸ்வி, “எனது பெயரும் வாக்களர் பட்டியலில் இல்லை. நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவேன்?” என கேள்வி எழுப்பினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு பீகார் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகிய நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம்:
இதுக்குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், “தேஜஸ்வி யாதவ் தனது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறியிருப்பது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ஆனால், தேஜஸ்வி யாதவின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் வரிசை எண் 416-ல் இடம்பெற்றுள்ளது. தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தேஜஸ்வி கூறுவது உண்மைக்கு மாறானது” எனத் தெரிவித்துள்ளது.
ஒரே நபர்.. ரெண்டு EPIC Number:
இதில் இன்னும் சர்ச்சையினை கிளப்பியிருப்பது என்னவென்றால், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தனக்கு வழங்கப்பட்ட EPIC Number- RAB2916120 என தேஜஸ்வி குறிப்பிடுகிறார். ஆனால், தேர்தல் ஆணையம் தேஜஸ்வி யாதவின் (EPIC Number- RAB0456228) என வேறு எண்ணை குறிப்பிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்பு தேஜஸ்வி யாதவிற்கு இரண்டு விதமான EPIC Number-ல் வாக்காளர் அடையாள அட்டை இருந்ததா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ராகுல் காந்தியும் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையம் செய்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவோம் என இன்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






