விண்ணுக்கு செல்லும் முதல் தமிழன்... ககன்யான் திட்டத்தில் அஜித் கிருஷ்ணன்!
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களில் ஒருவரான அஜித் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியாவும் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கான திட்டம் ககன்யான் எனப் பெயரிடுள்ள நிலையில், இது தொடர்பான ஆராய்ச்சிகளை கடந்த 2014 முதல் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், 'ககன்யான்' திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று (பிப்.27) அறிவித்தார். கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 வீரர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.
இவர்களில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். 1982-ல் சென்னையில் பிறந்த அஜித் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காகக் குடியரசுத் தலைவரிடம் தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றையும் பரிசாக பெற்றுள்ளார்.
சுகோய்-30, எம்.கே.ஐ., மிக்-21, மிக்-29, ஜேகுவார், டார்னியர், ஏ.என்.-32 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்ற அஜித் கிருஷ்ணன், தற்போது ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ளார். இதையடுத்து விண்ணுக்குச் செல்லும் முதல் தமிழர் என்ற பெருமையைப் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?