வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே?
'அன்பை கொடுத்து… அன்பைப் பெறு' என்பதே இந்த வாழ்வில் ஒளி கூட்டிக்கொள்ளும் ஆனந்த செயலாகும்.

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே?
- மதுகேசவ் பொற்கண்ணன்
வாழ்க்கை மிக அழகானது. இயல்பானதும்கூட. அதுசரி, வாழ்க்கையை எப்படி அழகாக வாழ்வது? இதுவொரு கடினமான கேள்வி. இதற்கு இலகுவான பதில் பாரதியிடம் இருக்கிறது. ‘அன்பென்று கொட்டு முரசே; அதில் ஆக்கம் உண்டாம்’ என்பதுதான் அந்த பதில்.
அதே பாரதிதான் சொல்கிறான், ‘உங்களுக்குத் தொழில் இங்கே… அன்பு செய்யக் கண்டீர்’ என்று. ’அன்பே சிவம்’ என்பதும் பெரியோர் வாக்கு. அவ்வளவுதாங்க… அன்பாக இருந்தாலே வாழ்க்கை மிக அழகாகிவிடும்.
‘அன்பாக இருந்தால் வாழ்க்கை அழகாக இருக்கும்’ என்பது பலருக்கு இங்கு தெரிந்திருக்கிறது. ஆனால், ‘எப்படி அன்பாக இருப்பது?’ என்பதுதான் தெரிவதில்லை. இதுதான் நிஜம். இதுதான் யதார்த்தம். இதில் இன்னொரு நுட்பமான விஷயமும் இருக்கிறது. தன்னிடம் எல்லோரும் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொருவரும், மற்றவர்களிடம் துளியும் அன்பு காட்டாதவர்களாகவே இருப்பதுதான். சில லாரிகளின் பின்புறத்தில் ‘ஒளிகொடுத்தால் வழி கிடைக்கும்’ என்று எழுதியிருப்பதை பார்த்திருக்கலாம். ’அன்பை கொடுத்து… அன்பைப் பெறு’ என்பதே இந்த வாழ்வில் ஒளி கூட்டிக்கொள்ளும் ஆனந்த செயலாகும்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பாட்டிலில் இருக்கிற கோக்கோ கோலாவின் கடைசிச் சொட்டுக்குக் கொடுக்கிற மதைப்பைக்கூட, சக மனிதரிடம் காட்ட மாட்டார்கள். ஆனால், ‘தன் மீது யாரும் அன்பு செலுத்துவதில்லை…’ என்றும் பிலாக்கணம் வைப்பார்கள்.
’சின்ன சின்ன விஷயங்கள் சந்தோஷம் தரலாம்… ஆனால் சந்தோஷம் என்பது சின்ன விஷயம் அல்ல’ என்பது பலருக்குப் புரிபடவே இல்லை. எதையும் ரசனையுடன் நோக்கத் தெரிய வேண்டும். பூவின் வடிவத்தை, புல்லின் அசைவை, சோப்பின் வாசனையை, சீப்பின் பற்களை, சல்லடையை, வறுத்தெடுக்க உதவும் சாரிணியை, காங்கிரஸ் கட்சியின் சின்னம் மாதிரியே இருக்கும் அன்னவெட்டியை, தண்ணி குடிக்கும் லோட்டாவை, புடவையில் இருக்கும் டிசைனை, தேங்காய்ப் பூ துண்டின் மென்மையை, முத்தத்தின் இச் இசையை, நகவெட்டியை, அழகான புருவத்தை, ஜாங்கிரிக்குள் இருக்கும் ஜீராவை, தொங்கு மீசையை ரசிக்கத் தெரியுமா உங்களுக்கு? தெரிந்திருந்தால் நிச்சயம் நீங்கள் ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்று சூடம் அணைக்காமல் சத்தியம் செய்வீர்கள்.
இந்த உலகத்தில் கண்டுபிடித்த நாளிலிருந்து தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளாத ஒரே ஒரு பொருள் ஒன்று உண்டு தெரியுமா உங்களுக்கு? அதுதான் குண்டூசி. குண்டூசியின் கொண்டையழகை ரசித்திருக்கிறீர்களா, நீங்கள்?
‘இந்தியன்’ படத்தில் ’பச்சைக் கிளிகள் தோளோடு’ என்கிற பாடலின் இடையில் ‘அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ என்றெழுதியிருப்பார் வைரமுத்து. இதை உணர்ந்து அனுபவித்தால் வாழ்வு நிச்சயம் மகிழ்வு நிகழ்வாகத்தான் இருக்கும். ஜீவனுடன் இருப்பதே அழகு; ஜீவனில் இருப்பதே அன்பு; அன்பின் இருப்பிடமே ஜீவன். உயிர் உருகும் சத்தம் கேட்கும் ஒவ்வொரு இதயமும் ஜீவனுடன், அன்புடன், அழகுடன் இருக்கும் என்பதுதான் கால காலமாக முன்னோர்கள் சொல்லி வைத்த சங்கதி.
ஒரே ஒருநாள் உங்கள் வாழ்வில் அன்பாக இருப்பது மாதிரி நடித்துதான் பாருங்களேன். அதனால் விளையும் விளைச்சலே அந்த நாடக அன்பை நாளடைவில் உண்மை அன்பாக ஆக்கிவிடும். நீங்கள் நடிக்கிறீர்கள் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது. நடிப்பு என்பது தெரியாமல் நடிக்க வேண்டும். அதிகம் இல்லை ஜென்டில்மேன்… அந்த நடிப்புக்கு சின்ன சின்ன வார்த்தைகள் போதும்.
அன்பை வெளிபடுத்தும் முக்கியமான வாசல், பாராட்டு! காலையில் எழுந்ததும் காபி கிடைக்கிறதா… அம்மாவுக்கு, மனைவிக்கு சின்னதாக ஒரு புன்னகைப் பாராட்டு. உசிலை மணி போல ’பேஷ் பேஷ்… காபின்னா இதுதான் காபி’ என்று நீட்டி முழக்க வேண்டாம். நம்ப மாட்டார்கள்.
அப்புறம் என்ன? இனிய நாள் தொடங்கிவிடும். அலுவலகம் கிளம்புகிறீர்களா? உடைகளில் ஒழுங்கு; மதிய உணவு தயாரிப்பு; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பாங்கு; வீட்டில் உள்ளவர்களுக்கு உரிய உணவு என அத்தனைக்கும் சின்னதாக பாராட்டுங்கள். முக்கியமாக கவனிக்கவும் வார்த்தைகளும் உணர்வும் உண்மையாக இருக்கும்படி பாராட்ட வேண்டும். மதியம் சாப்பிட்டவுடன் ஒரு போனில் அழைத்து ‘அந்தக் கூட்டு பிரமாதம்…’ என்று சிறு சாரல்.
மனம் திறந்து பாராட்டிப் பாருங்கள்… 100 பர்சென்ட் அன்பும் மகிழ்ச்சியும் கேரண்டி. எதிர்பாராத உங்களின் அன்பு அவர்களைத் திக்கு முக்காட வைக்கும். பிறகு என்ன? வாழ்க்கை அழகானது என்பதை அந்த சின்ன சின்ன அன்பும், பாராட்டும், உபசரிப்பும், அனுசரணையும், அன்பைப் பொழிந்து கொண்டே இருக்கும்.
நண்பர்களிடம், உறவினர்களிடம், எதிர்ப்படும் மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் உங்களின் உள்ளன்பு வெளிப்படும் விதமாக நாலு வார்த்தை அன்பாக பேசிப் பழகுங்கள். வாழ்க்கை அழகானதாக மாறிவிடும்!
உங்களுக்கு விளக்கமாக சொல்ல எனக்கு அந்த எட்டயபுரத்தானே துணைக்கு வருகிறான். ‘‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்; அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர்’’ என்று பாரதி வார்த்தைகள் வாழ்க்கைக்கும் பொருந்தும். நிதி குறைவு - அதிகம் என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. இதில் ‘வாய்ச்சொல் அருளீர்’ என்பதே மந்திரச்சொல். அந்த மந்திரச்சொல்லை சிக் என பிடித்துக் கொண்டால் வாழ்வு அழகானதாகும்.
கண்ணதாசனிடம் ஒரு மேடையில் ஒருவர் ‘வாழ்க்கை என்றால் என்ன?’ என்று ஒரு கேள்வி கேட்டார். சட்டென பதில் சொன்னார் பாட்டரசர்: ‘வாழ்ந்து பார் தெரியும்’ என்று.
நண்பர்களே கணவனோடு வாழப் பிடிக்காமல் அம்மா வீட்டுக்கே திரும்பி வந்த பெண்களை தமிழில் ’வாழாவெட்டி’ என்று இழிவாக அழைப்பார்கள். உண்மையில் அன்பு செலுத்துவது எப்படி என்று தெரியும், வாழ்த்தெரியாதவர்களுக்குத்தான் அந்தப் பெயர் அப்பட்டமாக பொருந்தும்.
போர்களத்தில் ஒரு காலை இழந்தவன் இன்னொரு காலை நேசிப்பது மாதிரி… மனிதர்களை நேசியுங்கள். ரசனையை வளர்த்துக்கொள்ளுங்கள். பாராட்டி மகிழுங்கள். கூடவே அன்பை விதை நெல்லாக்குங்கள்… அப்புறமென்ன, நீங்களும் ’லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்பீர்கள்.
மதுகேசவ் பொற்கண்ணன்
What's Your Reaction?






