மூல நோயை முற்றிலும் விரட்ட முடியாதா? - டாக்டர் பி.நந்திவர்மன் பளிச் பதில்!

மூல நோய் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர் நந்திவர்மனின் பளிச் பதில்..

மூல நோயை முற்றிலும் விரட்ட முடியாதா?  - டாக்டர் பி.நந்திவர்மன்  பளிச் பதில்!
can hemorrhoids be completely cured?

மூல நோயை முற்றிலும் விரட்ட முடியாதா?  - டாக்டர் பி.நந்திவர்மன்  பளிச் பதில்!

- சந்திப்பு: மானா பாஸ்கரன்

 'நீங்கள் எதை எல்லாம் சாப்பாட்டில் தவிர்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள்... உங்களுக்கு என்ன நோய் வர சாத்தியம் உள்ளது என்பதை நான் சொல்கிறேன்...' என்பாராம் இந்திய மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்பட்ட சுஸ்ருதா.

மனிதர்களுக்கு வரக்கூடிய பாதிப்புகளில் தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் வருகிற பாதிப்புகள்தான் அதிகம். அதில் ஒன்றுதான் மூலநோய். இந்தப் பாதிப்பைப் பற்றிய முழு தகவல்களை அறிந்துகொள்வது பலருக்கு முன்னெச்சரிக்கையாக அமையுமல்லவா? இந்தத் துறையில்  மிகவும்  புகழ்பெற்ற மருத்துவர் நந்திவர்மனை, சென்னை - பழைய  வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் தெருவில் உள்ள அவரது மருத்துவமனையில் சந்தித்து உரையாடினோம்…

 உட்கார்ந்த நிலையில் பணிபுரிகிற பலர் தங்களுக்கு மூல நோய் பிரச்சினை இருப்பதாக சொல்வதற்குக் காரணம் என்ன?

’’முதலில் மூல நோய் என்பது என்னவென்பதைத் தெரிந்துகொண்டால், உங்கள் கேள்விக்கான பதிலை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். மூல நோய் என்பது மனிதர்களின் ஆசன வாயில் சிரைகள் எனப்படுகிற அசுத்த இரத்தத்தை மலக்குடல் பகுதியிலிருந்து கொண்டுசெல்லும் இரத்த நாளங்கள் வீங்கிப் புடைத்து வெளியே தெரிவதுதான் மூலம் (பைல்ஸ்) என்றழைக்கப்படும்.

ஆசன வாய் பகுதியில் ஏனல் குஷன் என்கின்ற மூன்று சதைத் துருத்தல் (பட்டன்கள்) இருக்கும். இவை தான் தன்னிச்சையாக மலம் கழியாமல் கட்டுப் படுத்தப் பயன்படுகிறது. மலச்சிக்கல் போன்ற தொல் லைகள் ஏற்படுகிறபோது முக்க வேண்டிய தொல்லை கள் ஏற்படுவதால் இந்த ஏனல் குஷன் பாதிக்கப்பட்டு கீழ் நோக்கி சரிந்துவிடும். இதுதான் பின்னர் மூலக் கட்டியாக மாறிவிடுகிறது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவருக்கு உடல் எடை அழுத்தத்தாலும், இயற் கையாக கழிக்க வேண்டிய கழிவுகளைக் கழிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருத்தல், கடின உழைப் பின்மை, உடல் பருமன் போன்றவை காரணமாகத் தான் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவருக்கு மூல நோய் அதிகம் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று சொல் லப்படுகிறது. இவர்களின் பணி சார்ந்த சூழல் மட்டு மின்றி இவர்களின் உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும்.’’

ஒருவர் தனக்கு மூல நோய் இருப்பதை என்னென்ன அறிகுறிகள் மூலம் உணரலாம்?

’’மூல நோய்க்கான அறிகுறிகள் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். மலம் கழிக்கிறபோது ஆசன வாயைச் சுற்றி வலி அல்லது வேதனை தோன்றி நீண்ட நேரம் கடுமையாக நீடிக்கும்.

பச்சை இரத்தம் என்பார்களே... அதுபோன்று புதிய இரத்தம் கழிவாயிலிருந்து கசியும். பெரும்பாலும் மலத் தோடு கலந்திராமல் தனியாகவே சொட்டும். ஆசன வாய்க்கு கீழே ஏதோ ஒரு கட்டி முளைத்திருப்பதுபோல ஆசன வாயைக் கழுவும்போது உணரலாம்.

ஆசன வாய்ப் பகுதியில் எப்போதும் நமைச்சல் போன்று இருப்பது. கழிப்பறைக்குச் சென்றால் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருப்பது. மீண்டும் மீண்டும் மலம் கழிக்க வேண்டும் போலிருப்பது. முக்கி முனகி சங்கடப்பட்டு மலங்கழிக்க முயல்வது போன் றவை எல்லாம் மூலநோயின் அறிகுறிகளாகக் கொள்ளலாம். பிரச்சினை அதிகமாக இருக்கிறபோது வலி அதிகமாக ஏற்படும். இதை பரிசோதனையின்போது கண்டறியலாம்.

யாருக்கெல்லாம் மூல நோய் வருமென்று கூற முடியுமா டாக்டர்?

மூல நோய் வயது வித்தியாசமின்றி எவருக்கு வேண்டு மானாலும் இந்த நாளில் வரலாம். அதற்குக் காரணம் இன்றைய மக்களின் உணவு முறைதான். நாற்பது வயதிற்குப் பிறகு மூல நோய் வருவதற்கான வாய்ப்பு கள் அதிகம். குறிப்பாக ஆண்களைவிட பெண்களுக் குக் கூடுதலாக மூல பாதிப்பு வரும். தொடர்ந்து மலச் சிக்கல் உடையவர்கள், உட்கார்ந்து பணி புரிபவர்கள், முறையற்ற உணவுப் பழக்கமுள்ளவர்கள், குறைவான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் போன்றவர்களுக்கு மூல நோய் பாதிப்பு ஏற்படலாம்.’’

வராமல் தடுக்க முடியுமா மூல நோயை?

‘‘நிச்சயம் முடியும். உடல் எடையை சரிபார்த்து உய ரத்திற்கேற்ற எடையைப் பராமரிப்பது, மலச்சிக்கல் இல்லாமல் கவனிப்பது, முறையான நார்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்கள், உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல், தினமும் குறைந்த அளவு இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது, போதுமான உடல் பயிற்சி, சரியான தூக்கம், உணவில் அதிக கார மின்மை போன்றவற்றைக் கடைப்பிடித்தால் மூல நோய் என்றில்லை பிற நோயினையும் வராதே... அங்கேயே நில் என்று சொல்லலாம்.’’

 மூல நோய் வந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?

‘‘மூல நோய் வந்தவர்கள் முதலில் விரட்ட வேண்டியது அவர்களின் மலச்சிக்கல் தொல்லையைதான். எனவே, அவர்கள் நார்ச்சத்துள்ள காய், பழம், உணவு களைத் தொடர்ந்து அதிகம் உண்ண வேண்டும். அடுத்து தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு முக்க மலங்கழிக்காமல் இருக்க வேண்டும். எளிதாக மலங்கழிக்க முடியாவிட் டால் வெந்நீரில் டெட்டால் ஊற்றி உட்கார்ந்தால் வீக்கமும் வலியும் குறையும்.

அசைவ உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கும் என்பதால், முடிந்தவரை அசைவ உணவைத் தவிர்ப் பது நல்லது. ஸ்ட்ராங் காபி மற்றும் டீயைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் மலங்கழிக்க வேண்டும் என்கின்ற உணர்வு வந்த உடனேயே மலம் கழித்துவிட வேண்டும். மூல நோய் பாதிப்புள்ளவர்கள் வலி நிவாரண மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் மூல நோயின் பாதிப்பை அதிகரிக்காமல், அதிக தொல்லையை ஏற் படுத்தாமல் இருக்க முடியும். மேலும் முற்றிய மூல நோய் உள்ளவர்களுக்கு இந்த எச்சரிக்கை நடவடிக் கைகள் அவ்வளவாக கை கொடுக்காது என்பதையும், அவர்கள் உடனடியாக மூல நோய்க்கு சிகிச்சை அளிக் கும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதுதான் சிறந்தது.’’

 மூல நோய்க்கு என்ன சிகிச்சை செய்கிறீர்கள்?

‘‘மூல நோய்க்கு அதன் தன்மை, அறிகுறிகள், அதன் பாதிப்பு போன்றவற்றை வைத்து ஆறு வகையான சிகிச்சை முறைகள் இருக்கிறது. எனவே, மூல நோய் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை என்று சொல்லிவிட முடியாது. ஸ்கெலிரோ தெரபி எனப்படும் ஊசி செலுத்துதல், பேண்டிங் எனப்படும் வளையமிடும் முறை, க்ரையோ தெரபி, திறந்த அறுவை சிகிச்சை, நவீன ஸ்டேப்ளர் முறை, லேசர் சிகிச்சை என்று 6 வகையான சிகிச்சை முறைகள் உள்ளன.

இவ்வாறான ஆறு வகையான சிகிச்சைகள் ஒவ் வொன்றும் வேறுபட்டவை. ஒவ்வொரு வகை சிகிச்சை முறையிலும் பல நன்மைகளும் இருக்கின்றன. சிறிய அளவில் சிறு தொல்லைகளும் இருக்கின்றன. எனினும் இந்த ஆறு வகை மூல நோய்க்கான சிகிச்சையில் மிகச் சிறந்தது என்றும் மிகவும் பயனுள்ளது என்றும், எந்த மாதிரியான பாதிப்பும் இல்லாதது என்று மூல நோய்க்கு அளிக்கக்கூடிய லேசர் சிகிச்சையைத்தான் குறிப்பிட வேண்டும். இதற்கு செங்கதிர் லேசர் சிகிச்சை முறை (ஐ.ஆர்.சி. ஒளி ஊடுருவு கதிர் சிகிச்சை) என்று பெயராகும். மூல நோயாளியைப் பரிசோதித்து மூலத்தின் தன்மையைக் கண்டறிந்து அதன் மீது ஒளிக்கற்றைகளைக் குறிப்பிட்ட இடங் களில் பாய்ச்சுவது என்பதுதான் செங்கதிர் லேசர் சிகிச்சையாகும்.

இச்சிகிச்சையை மருத்துவமனையில் தங்கிதான் செய்துகொள்ள வேண்டும் என்றில்லை. அறுவை சிகிச்சையோ, தையலோ, காயமோ, இரத்த இழப்போ கிடையாது. வலியின்றி சிகிச்சை பெற முடிகிற வசதியும் உள்ளது. இந்த லேசர் சிகிச்சை முறை முதல் நிலை, 2ம் நிலை மூல நோயாளிகளுக்குப் பயன் தரும். வெளி மூலம் உள்ளவர்களுக்குப் பயன் தராது.

மூல நோய்க்கு முக்கியக் காரணமாக இருப்பது மலச்சிக்கல்தான் என்கிறீர்கள். அப்படியெனில் மலச்சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

‘‘மலச்சிக்கல் வராமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்துள்ள கீரை, காய்கள், பழங்கள், அதிக அளவில் சேர்க்க வேண்டும். டீ, காபி அசைவ உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உடம்பின் எடையைக் குறைப்பதும் அவசியம், மன உளைச்சல், பணிச்சுமை போன்றவைகளும் மலச்சிக்கலை உண்டாக்கலாம். என்று சொல்லப்படுகிறது. எனவே, மன உளைச்சல். பணிச்சுமை போன்ற உளவியல் காரணங்களையும் தவிர்க்க முயற்சிப்பது அவசியம். சரியான நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நார்சத்துள்ள காய்கள்: வெண்டை, முள்ளங்கி, முட்டைககோஸ், வெள்ளரிக்காய், பட்டாணி. கேரட், வெங்காயம், தக்காளி, பாகற்காய், கத்தரிக்காய், பீட்ரூட், கீரைகள், காலிஃப்ளவர், கீரைத்தண்டு, வாழைத்தண்டு.

நார்சத்துள்ள பழங்கள்: கொய்யா, பேரீச்சை, மாம்பழம், ஆரஞ்சு, ஆப்பிmaள், பப்பாளி, திராட்சை, பேரிக்காய், மாதுளை போன்றவற்றில் நார்சத்து அதிகம் உள்ளது. இவற்றை எல்லாம் உணவில் அதிக சேர்த்துக்கொள்ள வேண்டும்.’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow