சிபிஎம் பொதுச்செயலாளர் யார்? சலீமாவா? ராமச்சந்திர தோம்மாவா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி அடுத்த பொதுச்செயலாளர் யார் என கேள்வியெழுந்துள்ளது.

Sep 23, 2024 - 17:54
சிபிஎம் பொதுச்செயலாளர் யார்? சலீமாவா? ராமச்சந்திர தோம்மாவா?

பொதுவாக தேசிய கட்சிகளில் முடிவுகள் என்பது தனிநபரின் எண்ணங்கள் செயல் வடிவமாக்கப்படாது. கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக்கு பிறகே அது செயல் வடிவம் பெறும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொறுத்தவரை சற்று அதிகமாகவே காணப்படும். உச்சகட்ட பதவியான பொதுச்செயலாளர் என்ற பதவியாக இருந்தாலும் எந்த முடிவும் பொதுச்செயலாளர் என்ற தனிநபர் தனித்து எடுக்க இயலாது. தாலுகா முதல் தலைமை வரை நிர்வாக கமிட்டி உறுப்பினர் கலந்தாலோசித்து எடுப்பதே செயல் வடிவமாக்கப்படும். அவ்வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உச்சகட்ட அதிகார மையமாக பொலீட் பீரோ உள்ளது. அங்கு எடுக்கப்படும் முடிவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும். 

இந்தியாவை பொறுத்தமட்டில் மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு பிரச்னைகள் நிலவும், உதாரணத்திற்கு முல்லை பெரியாரு பிரச்னையை எடுத்து கொண்டால் அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நிலைப்பாடு வேறு வேறாக இருக்கும். தேர்தலில் கூட சில மாநிலங்களில் மத்தியில் கூட்டு மாநிலத்தில் தனித்து நிற்கும். ஆனால் பொலீட் பீரோ எடுக்கும் முடிவே மாநிலங்களில் செயல்படுத்தப்படும். 

2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 43 மக்களவை தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 10 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றி அன்றைய காங்கிரஸ் ஆட்சியமைக்க முக்கிய பங்காற்றியது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் மொத்தமாகவே 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மொத்தமாக 52 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 

1982 முதல் 2011 வரை ஆட்சி செய்த மேற்குவங்கத்திலும், 1978 முதல் 1988 வரையிலும் பின் 1998 முதல் 2018 வரையிலும் கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிபுராவிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியை இழந்தது. 2016 -2021 காலகட்டத்தில் தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலே கம்யூனிஸ்ட்கள் இல்லாத சட்டப்பேரவையாகச் செயல்பட்டது. 

’மக்கள் செல்வாக்கை இழந்த மார்க்சிஸ்ட்கள்’ என சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. நீண்ட நெடிய விமர்சனங்கள் உள்ளான நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சில மாற்றங்களை முன்னெடுக்கத் துவங்கியது அக்கட்சி. 

அதன்வெளிப்பாடு தான், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல் என இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் 21 வயது பெண்மணியான ஆர்யா ராஜேந்திரனைத் திருவனந்தபுர மேயராக தேர்வு செய்து இந்தியாவில் மிகக்குறைந்த வயது மேயர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறச் செய்தது. கேரளாவில் முக்கிய துறையான சுகாதாரத் துறையை சரோஜா டீச்சருக்கு வழங்கப்பட்டது. மேலும் நீண்ட கால விமர்சனமான பொலீட் பீரோவில்  குறிப்பிட்டவர்கள் மட்டுமே இடம்பெறுகின்றனர் என்ற விமர்சனத்திற்கு, 2022 ஆம் ஆண்டு முதன்முறையாக பொலீட் பீரோவில் பட்டியல் வகுப்பை சார்ந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திர தோம் தேர்வாகியிருந்தார். பாஜக பட்டியலினத்தவர்களை குடியரசு தலைவர் மற்றும் மாநில தலைவராக்கியது. தமிழிசை செளந்தராஜனை மாநிலத்தில் பெண் தலைவராக்கியது போன்ற முன்னெடுப்புகளை செய்தது. அடையாள அரசியல் என்று ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் பிரதிநிதித்துவம் என்பது இங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கட்சியை வழிநடத்த தற்போது தற்காலிக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் மார்க்சிஸ்ட் தலைமை முடிவுவெடுத்துள்ளதாக தெரிகிறது. மத்திய கமிட்டி 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கூட உள்ள நிலையில், கட்சி விதிகளின் அடிப்படையில் 2025 வரை தற்காலிகமாக பொதுச்செயலாளரை மத்திய குழு தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது. 

இதில், மூன்று பேர் பெயர்கள் இறுதி பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்தின் மனைவியும் மூத்த நிர்வாகியுமான பிருந்தா காரத், மேற்கு வங்க மாநில  செயலாளர் முகமது சலீம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்த ராமச்சந்திர தோம் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. பொதுவாக இந்திய துணைகண்டம்  மொழிவாரியான மாநிலங்கள் பிரிந்துள்ளதால் ஆங்கிலத்தை சரளமாக கையாளக்கூடியவருக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

-மா.நிருபன் சக்கரவர்த்தி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow