டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் முறைகேடு? - நடவடிக்கை எடுக்க தேர்வர்கள் கோரிக்கை
350 பேருக்கு மதிப்பெண்களில் மிகப்பெரும் முரண்பாடுகளோடு வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரியில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வு விடைத்தாள்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மெயின் தேர்வு விடைத்தாள்களில் பல முறைகேடுகள் நடந்திருக்கலாம் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். தேர்வு எழுதியவர்களில் ஐந்தாயிரம் பேருக்கு அண்மையில் அரசு பணி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் விடைத்தாள் நகல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது . அதில் பலருக்கு மதிப்பெண்கள் முரண்பாடாக வழங்கப்பட்டு இருப்பதால், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.
உதவி சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், தொழிலாளர் நல ஆய்வாளர் என அதிகாரிகள் நிலையில், குரூப் 2 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெயின் தேர்வில், விடைத்தாள்களை பலருக்கு மாற்றி வழங்கப்பட்டது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கு பிறகு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் வழங்கப்பட்டன. மெயின் தேர்வு விடைத்தாள் நகல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 500 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த விடைத்தாள் நகல்களை வாங்கிப் பார்த்த தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, மெயின் தேர்வு விடைத்தாளை இரண்டு மதிப்பீட்டாளர்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்வார்கள். இதில் இரண்டு பேரும் மிகப்பெரும் வித்தியாசத்தில் முரண்பாடாக மதிப்பெண்களை வழங்கி இருப்பது தெரியவந்திருக்கிறது.ஒரு தேர்வருக்கு 12 மதிப்பெண்களைக் கொண்ட 19வது கேள்விக்கு பத்து மதிப்பெண்கள் வழங்கியுள்ளார் . இரண்டாவது மதிப்பீட்டாளர், வெறும் அரை மதிப்பெண் வழங்கியுள்ளார் .
38வது கேள்விக்கு முதல் மதிப்பீட்டாளர் 12க்கு 8 மதிப்பெண்கள் வழங்கிய நிலையில், இரண்டாவது மதிப்பீட்டாளர் பூஜ்ஜியம் வழங்கி இருக்கிறார்.இதேபோன்று மற்றொரு தேர்வருக்கு, கேள்வி எண் 36க்கு, 12க்கு ஏழரை மதிப்பெண்கள் வழங்கிய நிலையில், மற்றொருவர் வெறும் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கியுள்ளார். பதினைந்தாவது கேள்விக்கு, முதல் மதிப்பீட்டாளர் 12க்கு 6 மதிப்பெண் வழங்கிய நிலையில், மற்றொருவர் வெறும் ஒரு மதிப்பெண் வழங்கியிருக்கிறார் .
தற்போதைய நிலவரப்படி 350 பேருக்கு இவ்வாறு மதிப்பெண்கள் மிகப்பெரும் முரண்பாடுகளோடு வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.இந்த விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?