இளமையைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?
நாம் அனைவருமே இளமையாக இருக்கத்தான் விரும்புகிறோம். யாராவது உங்கள் வயது என்னவென்று கேட்டால், நீங்களே சொல்லுங்கள் என்போம். அவர் நமது வயதை விட குறைவான வயதைச் சொன்னார் என்றால் மகிழ்கிறோம். அதிகமாக சொன்னார் என்றால் “அப்படியா தெரியுது” என ஏமாற்றத்தோடு மீண்டும் கேட்கிறோம். அப்படித்தான் தெரிகிறது என்று சொன்னால் சோர்வடைகிறோம். முதுமைத் தோற்றம் வராமல் இளமைப் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் முறையான வாழ்வியலைப் பின்பற்றினாலே போதும் என்கின்றனர் மருத்துவர்கள். இளமையைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சரும நல மருத்துவர் பூர்ணிமாவிடம் கேட்டோம்...
“பல்வேறு காரணங்களால் வயதாகும் செயல்பாடு வேகமாக நடக்கிறது. நரை, முகச்சுருக்கம் ஆகியவற்றை இளவயதினரிடமே பார்க்க முடிகிறது. 20 -24 வயதுடையவர்கள் மத்தியில் கூட நரைத்த முடி தென்படுகிறது. வளரிளம் பருவத்தில்தான் பெருமளவில் முகப்பரு ஏற்படும். ஆனால் 35 - 40 வயதுடையவர்களுக்குக் கூட முகப்பரு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இள வயதிலேயே முடி கொட்டி வழுக்கையானவர்கள் இருக்கிறார்கள். வயது முதிர்ந்த பிறகு ஏற்படும் இது போன்ற மாற்றங்கள் இளம் வயதிலேயே ஏன் ஏற்படுகிறது என்றால் அதற்கு நமது வாழ்வியல் முறை சீரற்று இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், சீரான தூக்கம் இல்லாதது, ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் என வயது முதிர்ந்த தோற்றத்தை எட்டுவதற்கு பல்வேறு காரணங்களைக் கூற முடியும். முந்தைய தலைமுறையோடு ஒப்பிடுகையில் இன்றைக்கு உடல் உழைப்பு குறைந்திருக்கிறது. உடல் இயக்கம் குறைவாக உள்ள வேலைகளில் ஈடுபடுகிறோம். உணவுப்பழக்கம் அறவே மாறியிருக்கிறது. சத்தான உணவுகளை எடுப்பதைக் காட்டிலும், ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கிறோம். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் சரிவிகித அளவில் எடுத்துக் கொள்ளாததால் உடல் சார்ந்து பல சத்துக்குறைபாடுகளை எதிர்கொள்கிறோம். அதன் விளைவாகவும் வயதான தோற்றத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது.
இளமையைத் தக்க வைத்துக் கொள்ள Anti aging சிகிச்சைகளை மேற்கொள்ளலாமா என்றால் அது தேவையைப் பொறுத்தது. ரெட்டினால் போன்ற சில சிகிச்சைகள் மூலம் இளமையின் பொலிவை கொண்டு வர முடியும் என்றாலும் முதுமையான தோற்றம் ஏற்படாமல் முன் கூட்டியே பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதற்கு நமது வாழ்வியலை முறைப்படுத்த வேண்டும். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் மாவுச்சத்து மிகுந்த அரிசி அதிக அளவிலும், புரதம் மிகுந்த காய்கறிகள் குறைந்த அளவிலும் இருக்கின்றன. நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் தேவை என்றாலும் புரதச்சத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சாப்பாட்டை குறைவாக எடுத்துக் கொண்டு காய்கறிகளால் ஆன பொரியல், கூட்டு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் போதுமான அளவுக்கு எடுத்துக் கொண்டே தீர வேண்டும். சராசரியாக நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
உடலின் ஹார்மோன் மாற்றங்கள் முறையாக நிகழ வேண்டும் என்றால் அதற்குத் தூக்கம் அவசியம். சரியான நேரத்தில், சரியான அளவு தூங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். இரவில்தான் தூங்க வேண்டும். இரவு முழுவதும் தூங்கும்போது உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளுக்குமான ஹார்மோன் செயல்பாடுகள் சீராக நடைபெறும். மெலட்டோனின் என்கிற ஹார்மோன் தான் சரும நலனைப் பேணுகிறது. இன்றைக்கு நம்மிடையே செல்போன் பயன்பாடு மிகுந்து விட்டது. இதன் விளைவாக இரவு தூக்கத்தை தள்ளிப்போட்டு நள்ளிரவில்தான் தூங்குகிறோம். இப்படியாகத் தூங்குகையில் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்காது. நாம் இரவில் சரியாக தூங்கா விட்டால் உடலே எது இரவு எது பகல் என குழம்பி விடும். இதனால் ஹார்மோன் செயல்பாடுகள் சரி வர நிகழாததால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அவற்றுள் சரும நல பாதிப்புகளும் அடக்கம். இதன் விளைவாக வயது முதிர்ந்த தோற்றம் விரைவாக ஏற்படும் பாதிப்பு இருக்கிறது. ஆகவே இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரையிலான நேரத்தில் அவசியம் தூங்கி விட வேண்டும். நன்றாகத் தூங்கும்போது உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும்” என்றவர் உணவு, தூக்கம் ஆகியவற்றை முறைப்படுத்துவதோடு சரும நலன் சார்ந்து அன்றாடம் மேற்கொள்ள வேண்டியவற்றைக் கூறுகிறார்.
“மேற்சொன்ன வாழ்வியல் மாற்றங்கள் ஒட்டுமொத்த உடல் நலத்தையும் பேணுவதற்கானவை. முகப்பொலிவை பேணுவதற்காக மட்டுமே சிலவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். முகச்சுருக்கம், கருவளையம், வறண்ட தோல் ஆகியவற்றால் இளமைத் தோற்றம் காணாமல் போகிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால் மாய்ச்சரைஸர், சன் ஸ்க்ரீன் மற்றும் ஃபேஸ் வாஷ் ஆகியவற்றை தினசரி பயன்படுத்த வேண்டும். நமது சருமத்தில் எப்போதும் ஈரப்பதமும், எண்ணெய்ப் பிசுக்கும் இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் மாய்ச்சரைஸர் பயன்படுத்தச் சொல்கிறோம். இதனைப் பயன்படுத்துகையில் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளும். சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் நமது சருமத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகத்தான் கருத்துப் போகிறோம். இக்கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கும் முன் ஃபேஷ் வாஷ் க்ரீம் மூலம் முகத்தை கழுவ வேண்டும். இவை சரும நலன் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படையான செயல்பாடு. இதை மேற்கொண்டாலே இளமையை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். இதையெல்லாம் பின்பற்றியும் வயது முதிர்ந்த தோற்றம் ஏற்படுகிறதெனில் அதற்கென பல சிகிச்சைகள் இருக்கின்றன.” என்கிறார் பூர்ணிமா.
- கி.ச.திலீபன்
What's Your Reaction?