ஓட்டு போட சொந்த ஊர் போறீங்களா? .. 10,214 தேர்தல் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கம்.. முழு விபரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக, 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 2,970 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 15, 2024 - 16:48
ஓட்டு போட சொந்த ஊர் போறீங்களா? .. 10,214 தேர்தல் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கம்.. முழு விபரம்

நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. வரும் ஏப்ரல் 19, 26, மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக பலரும், தாங்கள் வாக்காளர்களாக உள்ள தொகுதிகளுக்குச் செல்வார்கள். 

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7,154 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் செல்பவர்கள் டிக்கெட்டுகள் புக் செய்ய முடியாத அளவிற்கு வெயிட்டிங் லிஸ்ட் உள்ளதால் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் 17, 18 ஆகிய 2 நாட்களில் சென்னையிலிருந்து 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow