ஓயாத மின் வெட்டு.. கருகும் நெற்பயிர்கள்.. கவலையில் விவசாயிகள்.. மும்முனை மின்சாரம் வழங்க கோரி மறியல்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வெட்டு காரணமாக நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலையடைந்த விவசாயிகள், மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் விவசாய பணிகள் முடங்கியதாக தெரிகிறது.
காவிரி ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்டு வந்த டெல்டா விவசாயிகள், கடந்த சில வருடங்களாக போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் மின்சார மோட்டார்கள் மூலம் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டும் விவசாயிகள், இதனால் கோடை சாகுபடியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், திருப்பனந்தாள் வைத்தீஸ்வரன்கோயில் செல்லும் சாலையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?