கேப்டனுக்கு பாரத் ரத்னா.. பள்ளிகளில் நல் ஒழுக்கம்.. தேமுதிக நிறைவேற்றிய 10 தீர்மானங்கள்

தருமபுரியில் நடைப்பெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த விஜயகாந்துக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும், வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் ‘நல் ஒழுக்கம்’ பாடப்பிரிவினை செயல்படுத்த வேண்டும் என 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Apr 30, 2025 - 13:16
கேப்டனுக்கு பாரத் ரத்னா.. பள்ளிகளில் நல் ஒழுக்கம்.. தேமுதிக நிறைவேற்றிய 10 தீர்மானங்கள்
dmdk working and general committee meeting

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு ;-

தீர்மானம்:- 1

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் கழகத்திற்காக பணியாற்றி மறைந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மறைவிற்கும் மற்றும் உலக கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும் தேமுதிக சார்பாக ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபடுகிறது.

தீர்மானம்:- 2

ஜம்மு காஷ்மீர் பஹால்காம் பகுதில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் செய்து 26 பேர் உயிர் இழந்ததோடு, பல பேர் காயமடைந்துள்ளனர். இதை தேமுதிக வன்மையாக கண்டிக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லைகளை இன்னும் பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து, இதுபோன்ற தீவிரவாத தாக்குதல் இனி நடக்காத வண்ணம் நமது நாட்டை காக்க வேண்டியது அவசியம் என்று இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபடுகிறது.

தீர்மானம்:- 3

நமது - இதய தெய்வம், வாழும் வள்ளல் கழகத்தின் நிறுவனத்தலைவர் திரு.கேப்டன் அவர்களுக்கு நமது கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தமிழக மக்களும் ஒன்று சேர்ந்து, கேப்டன் அவர்களுக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழுவில் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றபடுகிறது.

தீர்மானம்:- 4

நமது இதய தெய்வம், வாழும் வள்ளல் கழகத்தின் நிறுவனத்தலைவர் திரு.கேப்டன் அவர்களுக்கு கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், பொதுமக்களும் பல நாள் வேண்டுகோளாக கேப்டன் - அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும் என்றும், சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்:- 5

வக்பு சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும், தீங்கும் ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும் என தேமுதிக வலியுறுத்தி இந்த பொதுக்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றுக்கிறது.

தீர்மானம்:- 6

சாதி வெறி தூண்டுதலால் தமிழகத்தில் உள்ள மாணவர்களிடையே பழிவாங்கும் உணர்வும், போதைக்கு அடிமையாகும் நிலையும் இருப்பதால், மாணவர்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள். எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல் வழி காட்ட வேண்டியது அரசின் கடமையாகும். ஆகவே வரும் கல்வி ஆண்டில் "நல் ஒழுக்கம்" பாடப்பிரிவினையை (counselling) செயல்படுத்தி, அவர்களுக்கு அறிவுரையை வழங்கி, பெற்றோர்கள் ஆசிரியர்கள், காவல் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து மாணவர்களை நல்வழி படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்:- 7

தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் தொடந்து நடந்துகொண்டிருக்கிறது. இதனால் பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் குடும்பங்களின் பாதிப்புகளும், சண்டை சச்சரவுகளும் அன்றாடம் நடப்பது ஒரு நிகழ்வாக உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்களுக்கு முழு கவனம் செலுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மதுபானம் (tasmac) விற்பனையை படிப்படியாக குறைத்தும், கஞ்சா மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழித்தும், தமிழகத்தை காக்க வேண்டியது இந்த அரசின் கடமையாகும் என்று இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்:- 8

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் படகுகளை உடைப்பதும், மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், பல வருடங்களாக தொடந்து நடந்து வருகிறது. இதை தேமுதிக வன்மையாக கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் இச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு கச்சத்தீவை மீட்டெடுப்பதே மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகும்
என்று இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்:- 9

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. மின்சாரம் மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து, நெசவாளர்களின் கூலியை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்:- 10

பட்டாசு ஆலைகளின் வெடிவிபத்து என்பது விருதுநகர் மாவட்டத்திற்கு சாபாக்கேடாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் ஓமலூர் போன்ற பல்வேறு இடங்களில் இந்த பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதும், பல உயிர்களை இழப்பதும் - அன்றாடம் ஒரு நிகழ்வாக உள்ளது. எனவே தனிக்கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்தும், இனி இதுபோன்று உயிர் இழப்புகளும், விபத்துக்களும் நடக்காத வண்ணம் மக்களை காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்பதை இந்த பொதுக்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றி கேட்டுக்கொள்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow