இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்யுங்க.. தவெக கட்சித் தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை

சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த த.வெ.க (TVK) வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு குறித்து ’உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்புறேன்’ என த.வெ.க தலைவர் விஜய் (vijay) , தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

Apr 30, 2025 - 16:27
இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்யுங்க.. தவெக கட்சித் தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை
vijay order to tvk party workers

TVK VIJAY: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட 7 மாவட்டங்களைச் சேர்ந்த தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கடந்த ஏப்ரல் 26 & 27 ஆகிய இரு நாட்கள் நடைப்பெற்றது. இரண்டு நாட்களும் விஜய் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றினார்.

விஜயை பார்க்க கட்சித் தொண்டர்கள் உட்பட ரசிகர்களும் திரளாக பங்கேற்றனர். சாலைகளில் விஜய் சென்ற காரினை பின் தொடர்ந்து பலரும் தங்களது வாகனங்களில் நிகழ்வு நடக்கும் இடத்தை நோக்கி வந்தனர். அப்போது சில அசாம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைப்பெற்றன. இந்நிலையில் அன்பு கட்டளை ஒன்றினை தனது கட்சித் தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளார், தவெக தலைவர் விஜய். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-

” என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம். மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams. நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். 

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. 

அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரி பண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்,அதுதான் நீங்க…இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்.

நம்ம அரசியலுக்கு இதுதான் நல்லது:

உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்…அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்… ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும். எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்,நீங்கதான் எனக்கு precious.இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல.
உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்க அன்ப நான் மதிக்கிறேன்.இனி எப்பவும் மதிப்பேன். அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது.நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…

நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம், 100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால, நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்.செய்வீங்க… செய்றீங்க…ஓகே?...Thank u friends….Love you all… “ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் கட்டளையினை ஏற்று, அவரது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் சாலை விதிகளை மதிப்பதோடு, கட்சி தொடர்பான நிகழ்வில் கட்டுக்கோப்பாக செயல்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow