கமல்நாத் மகன் நகுல் நாத் முதல்.. ப.சிதம்பரம் மகன் கார்த்தி வரை.. டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்கள் யார் யார்?

மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் பெரும் கோடீஸ்வர வேட்பாளர்களில் முதல் 10 வேட்பாளர்கள் யார் யார்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Apr 18, 2024 - 17:34
Apr 18, 2024 - 18:01
கமல்நாத் மகன் நகுல் நாத் முதல்.. ப.சிதம்பரம் மகன் கார்த்தி வரை.. டாப் 10 கோடீஸ்வர வேட்பாளர்கள் யார் யார்?

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 2 வரை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர். பலரும் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்றாலும் டாப் 10 கோடீஸ்வரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் என்பவர் தான். காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் மகன் நகுலுக்கு ரூ.716 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் இவர் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தபோதே அவருடைய சொத்து மதிப்பு குறித்து பரவலாக அறியப்பட்டிருந்தார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.662 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. 

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ். இவர் தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.304 கோடிக்கு மேல் என்று கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. 

பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர் பாஜகவை சேர்ந்த மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா, இவர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கர்வால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு ரூ.206 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் தொகுதியில் போட்டியிடும் மஜித் அலிக்கு ரூ.159 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் இவர் 5வது இடத்தில் இருக்கிறார்.

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பவர் வேலூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இருக்கிறார். ஏராளமான தனியார் கல்லூரிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் இவர், புதிய நீதி கட்சியின் நிறுவனர். இவருக்கு ரூ.152 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள ஜெயபிரகாஷ்தான் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு ரூ.135 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

பணக்கார வேட்பாளர் லிஸ்டில் 8வது இடத்தில் இருப்பவர் வின்சென்ட் எச். பாலா. மேகாலயாவின் தலைமைப் பொறியாளராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். தற்போது மேகாலயாவின் ஷில்லாங் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.125 கோடிக்கும் மேல் இருக்கும்.

இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருப்பவர் பாஜக வேட்பாளர் ஜோதி. ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் தொகுதியில் இவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.102 கோடிக்கும் அதிகம் என கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் இருக்கிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த முறையும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ரூ.96 கோடி சொத்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.

நாளைய தினம் நடைபெற உள்ள முதற்கட்ட தேர்தலில் பாஜக சார்பில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸில் இந்த சதவிகிதம் 88 ஆகவும், அதிமுகவில் 97 ஆகவும், திமுகவில் 97 சதவிகிதமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் களம் கோடீஸ்வரர்கள் மட்டுமே உலா வரும் களமாக மாறி விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow