ஜாபர் சாதிக் வழக்கில் புதிய திருப்பம்.. சிக்கும் சாதிக்கின் வலதுகரம்.. யார் அந்த ஹவாலா புரோக்கர்..? ஜாபரிடம் வாக்குமூலம் பெற்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள்
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் செல்போன் குரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அவரது வலதுகரமாக செயல்பட்ட ஹவாலா புரோக்கர் ஒருவர் பற்றிய துப்பு கிடைத்துள்ள நிலையில், அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டையே அதிர்ச்சி அடைய செய்த இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, அடுத்தடுத்த திருப்பங்களால் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. கடத்தலில் மூளையாக செயல்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணிப்பரிமாற்ற புகாரில் அமலாக்கத்துறையும் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது.
ஜாபர் ஜாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர், தொழில் கூட்டாளி அப்துல் பாஷித் புகாரி உள்பட பலரும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் அமீர், அப்துல் பாஷித் புகாரி ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த பின் கிடைக்கக்கூடிய ஹவாலா பணத்தை, சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர் ஒருவரிடம் மாற்றி, பின்னர் அந்த பணத்தை ஜாபர் சாதிக்கிற்கு கொடுத்திருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வரும் பணத்தை மாற்றி கொடுத்து வந்ததும் ஆய்வில் தெரியவந்ததையடுத்து, அந்த புரோக்கருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜாபர் சாதிக்கிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் அவர், மண்ணடி ஹவாலா புரோக்கர் உள்ளிட்ட சிலரிடம் பேசியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பெற்று, அதை அமலாக்கத்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஜாபர் சாதிக் எங்கிருந்து வாங்கினார் என்ற விவரங்கள் இதுவரை தெரியாததால், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜாபர் சாதிக்கின் வலது கரமாக செயல்பட்டதாக கூறப்படும் அந்த ஹவாலா புரோக்கர் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர் விசாரிக்கப்பட்டால் இந்த வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்த நிலையில், ஆஸ்திரேலியா போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
What's Your Reaction?