102 வயது.. தள்ளாடும் வயதிலும் வாக்களித்த முதியவர்கள்.. தடைகளை தாண்டி ஜனநாயகக் கடமை
வாக்களிக்க தகுதியிருந்தும் பலர் நீண்ட வரிசை, வெயில் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கடமை தவறுபவர்களுக்கு மத்தியில் வானுயர மலைகளில் இருந்து இறங்கி வந்தும், கடல் போல் படர்ந்திருக்கும் ஏரியை கடந்தும், ஊனம், வயது முதிர்வு ஆகியவற்றை புறந்தள்ளி ஜனநாயகக் கடமையாற்றியவர்களை பார்க்கும் போது வியப்பை ஏற்படுத்துகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே கூன்விழுந்த 102 வயது மூதாட்டி சின்னம்மாள் என்பவர் தனது தள்ளாத வயதில், கையில் ஊன்றுகோளை ஊன்றி வந்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார்.
இதேப்போல திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி வாக்குச்சாவடியில், கதிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி தனது உறவினர் உதவியுடன் சர்க்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்குச்சாவடிக்கு தள்ளாடியபடி நடந்தே சென்று வாக்களித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்போற்றை உட்பட பத்திற்கும் மேற்பட்ட மலைவாழ்கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் ஜனநாயகக் கடமையாற்ற படகு மூலம் அணையை கடந்து, 2 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக நடந்தே சென்று வாக்களித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசனகுடி, கார்குடி மற்றும் கேரள எல்லையையொட்டி மலை கிராம பழங்குடியின மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
இதனிடையே, நீலகிரியில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட பிங் பூத்தில் உதகை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணா தனது வாக்கினை பதிவு செய்தார்.
What's Your Reaction?