மாணவர்களிடையே சாதி மோதல்கள்.. ஆய்வு செய்யும் நீதியரசர் சந்துரு.. அறிக்கை தர கால அவகாசம் நீட்டிப்பு
நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
தமிழகத்தில் பள்ளி - கல்லூரிகளில் நிலவும் சாதிய மோதல்களை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்பிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் நீதியரசர் சந்துருவின் பதவிக்காலம் மே 31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடம் நடத்தினாலும் மாணவப்பருவத்திலேயே சாதி மோதல்கள் அதிகரித்து வருகிறது. கைகளில் கலர் கலராக கயிறு கட்டி சாதியை அடையாளப்படுத்தி வந்தனர் மாணவர்கள். இதனையடுத்து மாணவ மாணவிகள் கைகளிலும் கழுத்திலும் சாதியை அடையாளப்படுத்தும் கயிறு கட்டுவது தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாதி, இன வேறுபாடுகளை களைவதற்கான வழிமுறைகளை வகுப்பதற்காக நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் 6 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கட்டிடத்தில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்த குழு காவல் துறை, கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பிடம் இருந்து கருத்துகளை சேகரித்து அறிக்கையை தயாரித்து வருகிறது. அத்துடன் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க ஏதுவான குறைதீர் அமைப்பை உருவாக்க தக்க வழிகாட்டுதல்களை இக்குழு ஆராய்ந்து வழங்கவேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டது.
இந்த ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை சமர்பிக்க வேண்டிய சூழலில், அவை தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இதேவேளையில், நீதியரசர் சந்துருவின் பதவிக்காலம் நிறைவடைய இருந்தது. அதனால் இந்த அறிக்கையை சமர்பிக்கும் வரை அவர் பதவியில் தொடர வேண்டும் என்பதால், வருகிற மே மாதம் 31ஆம் தேதி வரை அவரது பதவியை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
What's Your Reaction?