எங்க உங்க Voter ID-யை காட்டுங்க..? சென்னையில் விசாரித்த போலீஸ்.. அதிர்ந்த அதிமுக நிர்வாகி
கள்ள ஓட்டு போட வந்ததாக அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 2 பேரை பிடித்து சென்னை புளியந்தோப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை புளியந்தோப்பு டீமல்லாஸ் சாலையில், இந்து ஒற்றுமை கழக உயர்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்களிக்க நபர் ஒருவர் வந்தபோது, அவர் மீது திமுக வாக்குச்சாவடி முகவர் அருமைநாதன் என்பவருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யநாராயணன் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
சத்தியநாராயணன் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த காளிங்கராஜ் என்பதும், இவர் அதிமுக எழும்பூர் மேற்கு பகுதி பொருளாளராக இருந்து வருவதும் தெரியவந்தது. அவரது அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே வாக்களித்த ஒருவரின் வாக்கினை செலுத்த வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காளிங்கராஜை பிடித்து பேசின் பிரிட்ஜ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கனகராஜ் என்பவரின் பெயரில், இவர் கள்ள ஓட்டு போட வந்ததால், அவரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
காளிங்கராஜ், இதே போல் வேறு ஏதேனும் பகுதிகளில் கள்ள ஓட்டு போட முயற்சித்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னையில் அதிமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சித்து போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?