காரமடையில் பூசாரியிடம் இருந்து ரூ.12.50 லட்சம் மோசடி- இளைஞர் கைது

புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவையில் பதுங்கி இருந்த சிவாவை கைது செய்தனர்

Jan 11, 2024 - 18:37
காரமடையில் பூசாரியிடம் இருந்து ரூ.12.50 லட்சம் மோசடி- இளைஞர் கைது

காரமடையில் கோவில் பூசாரியிடம் முதலீடு செய்வதாக கூறி பணம் பெற்று 12 லட்சத்தி 50 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பெள்ளாதி பகுதியை சேர்ந்தவர்  முருகேசன். இவர் அங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் பூசாரியாக உள்ளார்.இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் சிவா பூசாரி முருகேசனிடம் தான் ஒரு பிரபல டிராவல்ஸ் கம்பெனியில் மேலாளராக உள்ளதாகவும், அதுமட்டுமின்றி தானும் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு விட்டு வருவதாகவும், நீங்களும் இதில் முதலீடு செய்தால் மாதம் 45,000ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதனை நம்பி, பூசாரி முருகேசன் 12லட்சத்தி 50 ஆயிரம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்த பின் இரண்டு மாதங்கள் மாதா மாதம் 45,000 வழங்கி விட்டு அதன் பின்னர் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், சிவாவிடம் கேட்க முயன்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார்.இதனையடுத்து, தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த முருகேசன் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவையில் பதுங்கி இருந்த சிவாவை கைது செய்தனர்.பின்னர் அவரிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow