‘எங்கள் துன்பத்தை கேட்பாரில்லை’ - கோவை விவசாயிகள் ஆதங்கம்

அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி குவாரியை தோண்டி கற்களை  லோடு லோடாக கடத்தும் பேர்வழிகளால் மண்ணும், மழையும், சூழலும் பாதிக்கப்பட்டு விவசாயம்தான் அழியுது

Nov 21, 2023 - 13:07
Nov 21, 2023 - 15:32
‘எங்கள் துன்பத்தை கேட்பாரில்லை’ - கோவை விவசாயிகள் ஆதங்கம்

இந்திய அளவில் விவசாய உற்பத்தியில் தமிழகம் மிக முக்கிய இடத்தில் இருக்கிறது.அதேப்போல் தமிழக அளவில் காய்கறி உள்ளிட்ட பல வகை விவசாய பொருட்கள் உற்பத்தியில் கோவை மாவட்டம் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து செல்கிறது. தேசிய அளவில் தமிழகத்தின் விவசாய பெருமையை உறுதி செய்வதில் கோவை மாவட்டத்தின் பங்கு மிகப்பெரியது!

இவ்வளவு முக்கியமான மண்டலமாக கோவை இருக்கும் நிலையில், அம்மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தாக பேணிப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமைதானே!இதில் சமரசம் செய்யவே கூடாது தானே!

ஆனால் அப்படித்தான் இருக்கிறதா நிலவரம்?.... என்று கேட்டால் ‘எங்க துன்பத்தை எங்கே போய் சொல்லி அழுறது?’ என்று ஆதங்கப்படுகிறார்கள் கோவை மாவட்ட விவசாயிகள். 

ஒரு அண்டா சோறுக்கு ஒரு சோறு பதம்! என்பது போல் சிறுவாணி சாலை  மஞ்சள் விவசாயியான நட்ராஜிடம் இதுகுறித்து “விவசாயம் இல்லாம மனுஷ வாழ்க்கை இல்லைங்கிறது நாங்க சொல்லி தெரிய வேண்டியதில்லைங்க. ஆனா எங்க பொழப்பு எப்படி இருக்குதுன்னு அரசும், மக்களும் கவனிக்கோணுமுங்க. 

அதிக வெயிலடிச்சாலோ, மழையடிச்சாலோ நீங்க ஒதுங்கி நின்னு பொழச்சுக்குறீங்க. ஆனால் எங்க பொழப்ப யோசிங்க. பயிர் கருகிடாமலும், அழுகிடாமலும் காப்பத்த களத்துல நிக்க வேண்டி இருக்குது. விவசாயத்துல ரசாயனம் போடாம இயற்கையா வேளாண்மை பண்ண எங்களுக்கும் ஆசைதானுங்க. ஆனால் சூழல் மாசுபட்டுட்ட நிலையில நோய்களையும், பூச்சி தாக்குதலையும் சமாளிக்க ரசாயனத்தை நம்பித்தான் ஆக வேண்டியிருக்குது. 

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவே கழுத்த நெரிக்கிறப்ப நாங்க எப்படித்தான் விவசாயத்தை சிறப்பா செஞ்சு, வித்து லாபம் ஈட்டுறதுங்க? அதை மானியத்துல தர்றோம், இதை மானியத்துல தர்றோமுன்னு கவர்மெண்டு கதையா விடுது. ஆனால் எந்த ஒரு சலுகையையும் அலைஞ்சு திரிஞ்சு வாங்குறதுக்குள்ளே உயிரு போய் திரும்புதுங்க. 

இயற்கை பெய்ஞ்ச் கெடுத்தாலும், காய்ஞ்சு கெடுத்தாலும் ஆதரவா சாஞ்சுக்க அரசாங்கத்தோட தோளைதான் தேடுறோம். ஆனா அரசாங்கமோ எங்களை பெருசா கண்டுக்கவே மாட்டேங்குது. விவசாயத்துக்கான முதலீட்டிலிருந்து எங்களுக்கு பல வகையான செலவு சுமைகள். அரசாங்கம் நினைச்சா இதை பெருமளவு குறைக்கலாம்.ஆனால் மனு மட்டும் வாங்கிக்கிறாங்களே தவிர மனசு வைக்கிறதில்லை. 

இது மட்டுமில்லை  வனத்தை ஒட்டிய பகுதிகளில் பட்டா நிலங்களில் விவசாயம் பண்ணினாலும் கூட மனித – விலங்கு மோதல் சம்பவம் தொடருது. வனத்துக்குள்ளே சரியான தீனி இல்லாத காரணத்தால விவசாய நிலங்களை தேடி வரும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளால் அதிகம் உயிரிழப்பை சந்திக்கிறது விவசாயிகள்தான். இதுக்கு ஒரு பெரிய தீர்வை கொண்டு வரமாடேங்கிறாங்க. 

இதுமட்டுமில்லைங்க  மணல் கடத்தல் பேர்வழிகள், செம்மண் கடத்தல் பேர்வழிகள், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி குவாரியை தோண்டி கற்களை  லோடு லோடாக கடத்தும் பேர்வழிகளால் மண்ணும், மழையும், சூழலும் பாதிக்கப்பட்டு விவசாயம்தான் அழியுது. இதை எல்லாம் அரசாங்க அதிகாரிகளிடம் சொன்னாலும் பெருசா கண்டுக்குறதில்லை. 

மாசாமாசம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கூட வெறும் கண் துடைப்புக்குதான் நடத்துறாங்க. கலெக்டர்ட்ட முறையிடுறோம், அவரும் அக்கறையா கீழ் நிலை அதிகாரிகளுக்கு உத்தரவு போடுறார். ஆனால் அந்த மனுஷங்க எங்கள் தேவையை நிறைவேத்திக் கொடுக்கணும்தானே. ஆனால் அது நடக்குறதில்லை. விவசாய இனம் அழிஞ்சு போச்சுண்ணா சோத்துக்கு என்ன பண்ணுவீங்க ஆபீஸர்ஸ்?” என்று கேட்டு நிறுத்தினார். 

-ஷக்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow