தமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 19 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

Feb 8, 2024 - 07:13
Feb 8, 2024 - 09:46
தமிழக மீனவர்கள் 19 பேர் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.அப்போது அங்கு ரோந்துப் பணிக்காக சென்ற இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 19 தமிழக மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்களை காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் 19 பேரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்ய கடந்த ஜன.21-ஆம் தேதி ராமேஸ்வரம், தனுஷ்கோடி வந்தபோது தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow