சிஎஸ்கே மேட்ச்.. ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை.. 13 பேரை கைது செய்த சென்னை போலீஸ்

May 2, 2024 - 19:09
சிஎஸ்கே மேட்ச்.. ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை.. 13 பேரை கைது செய்த சென்னை போலீஸ்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான  டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

17-வது ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் உள்ள பிரபல மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. 

இதனைத் தடுக்க காவல்துறையினருக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போலி டிக்கெட் விற்பனை, கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை, கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஐபிஎல் டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக  13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மதன், ஜலாருதீன், தியாகராய நகரைச் சேர்ந்த சிவயோகேஸ்வரன், அம்பத்தூரைச் சேர்ந்த ஜோசப், கொளத்தூரைச் சேர்ந்த சசிகுமார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கேயன், ராயப்பேட்டைச் சேர்ந்த ரகமதுல்லா, பையாசுதீன், போரூரைச் சேர்ந்த விக்னேஷ், மணப்பாக்கத்தைச் சேர்ந்த  கண்ணன்,  திருவள்ளூரைச் சேர்ந்த பரத், கோவையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், தருமபுரியைச் சேர்ந்த அர்ஜுன் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1,19,306 மதிப்புள்ள 33  ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  தொடர்ந்து 13 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow