கலவரமான கோயில் திருவிழா... தீ வைக்கப்பட்ட கடைகள்... கல்வீச்சில் கலவரக்காரர்கள்...
தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவின் போது கலவரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினரை கோயிலுக்குள் அனுமதிக்காததை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தீவட்டிப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காததாக தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கிருந்த சொர்ப்ப காவலர்கள் அவர்களை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.ஒரு கட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்த நிலையில், அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் போலீசாரின் பிடியை தளர்த்தி தப்ப வைத்தனர்.
கலவரத்திற்கு இடையே திறந்திருந்த கடைகளை கலவரக்காரர்கள் சூறையாடியதுடன், கடை ஒன்றுக்கு தீ வைத்தும் எரித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சிறப்பு காவல் படை போலீசார் வரவழைக்கப்பட்டு, கலவரக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும் கலவரத்தில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். அப்போது காவலர்களை சாபம்விட்டப்படி ஓடிவந்த மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
கோலாகலமாக துவங்கிய கோயில் திருவிழாவில் கலவரம் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனிடையே பாதுகாப்பிற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?