ரயிலில் செயின் பறிப்பு சம்பவங்கள்.. குதித்து தப்பியோடிய கொள்ளையர்கள்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்
ரயில் பயணிகளிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு, ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பும் கொள்ளையர்களை சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் வரை செல்லும் விரைவு ரயியில் எண்ணூரைச் சேர்ந்த பாரதி என்பவர் கடந்த 21-ம் தேதி முன்பதிவு பெட்டியில், தனது தாயாருடன் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது தாயார் கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது, அருகில் இருந்த அடையாளம் தெரியாத நபர், தாலிச் செயினை பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.
இதேபோன்று மேலும் 2 நகை பறிப்புச் சம்பவங்களும் அதே ரயிலில் நிகழ்ந்துள்ளது. இந்த 3 புகார்கள் மீதும் சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் கர்ணன், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
புகார் கொடுத்தவர்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து தனிப்படையினர் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 7 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ரயில் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் இருப்புப்பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸ்அப் எண் 99625 00500-ஐ தொடர்பு கொள்ளலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?