திடீரென பிளான்க்-ஆன கண்காணிப்பு திரை..! வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைகளில் என்ன ஆச்சு ..?
சிசிடிவி பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென கறுப்பு நிறத்தில் காட்சியளித்தது. இச்சம்பவத்தால், கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக காட்சி பதிவுகள் திரையில் தென்படாததால் கட்சி முகவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவுகள் நிறைவடைந்து மொத்தமாக 70.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பெட்டிகளை துணை ராணுவம் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 20ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.அருணா மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை கண்காணிக்க 163 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் காட்சிப்பதிவு திரையில் தெரியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் 24 மணி நேரமும் கண் அயராமல் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிசிடிவி பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென கறுப்பு நிறத்தில் காட்சியளித்தது. இச்சம்பவத்தால், கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது.
காட்சிகள் பதிவாகக்கூடிய பெட்டி சூடான காரணத்தினால் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், அந்த தொழில்நுட்ப கோளாறு சுமார் 20 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த காட்சி திரைகள் செய்லபட தொடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளையில், கண்காணிப்பு பதிவுகள் அனைத்துமே பதிவாகி உள்ளது, அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
What's Your Reaction?