வாட்ஸ் அப் குழுவில் போதைப்பொருள் விற்பனை.. சென்னையில் 2 பேர் கைது.. முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்?

May 2, 2024 - 15:32
வாட்ஸ் அப் குழுவில் போதைப்பொருள் விற்பனை.. சென்னையில் 2 பேர் கைது.. முன்னாள் அமைச்சருக்கு சிக்கல்?

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் 2 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒருவர் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலை பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று (மே 1) நள்ளிரவு தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். 
 
இதையடுத்து நடந்த விசாரணையில், அந்த நபர் சிமெண்ட்ரி சாலையை சேர்ந்த காதர் மொய்தீன்  என்பதும் திருவல்லிக்கேணியில் அலாவுதீன் சுல்தான் என்பவரிடம் இருந்து 3 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராகுல் என்பவர் அலாவுதீன் என்ற பெயரில் போதைப்பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர். 
 
தொடர்ந்து ராகுலிடம் நடத்திய விசாரணையில், வெளி‌மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட இ-சிகரெட், மெத்தபெட்டமைன் போதைப்பொருள் உள்ளிட்டவற்றை வாங்கி வந்து வாட்ஸ் அப் குழு மூலம் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. மேலும், கைது செய்யப்பட்ட ராகுல், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து போதைப்பொருள் விற்பனை தொடர்பாக திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள ராகுலின் வீட்டில்  போலீசார் சோதனை மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரம் தாண்டவமாடுவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் போலி பெயரில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது  திருவல்லிக்கேணி பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow